Tamil Books Novels

Maaveerarkal kaalaththal saavathillai, avarkal kaalaththai uruvakippavarkal.

சேகுவாரா ஒரு பார்வை 


உலகின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒரு மனிதன் சுடப்பட்டு கீழே விழுவான். அவனை யார் எங்கிருந்து, எதற்காகச் சுட்டார்கள் என எதுவும் தெரியாது. ஆனால், அவனைச் சுட்ட துப்பாக்கியின் மிச்ச புகை, அமெரிக்காவில் கசியும். உலக வரைப்படத்தில் இந்த ஓநாயின் காலடி படாது இடமே இல்லை.

“சே குவராவின் அமெரிக்கப் பயணமும், அமெரிக்க எதிர்ப்பு பேச்சும் சி.ஐ.ஏ வுக்கு சினமூட்டின. அதுவரை காஸ்ரோவை குறிவைத்து இயங்கிய சி.ஐ.ஏ தன் முழு எரிச்சலையும் சேகுவராவின் பக்கம் திருப்பியது. காஸ்ரோவைக் காட்டிலும் இவர் தான் ஆபத்தானவர் என இலக்கு தீர்மானிக்கப்பட்டது.உலக மக்களினால் மறக்கபட முடியாத சே குவரா

விழும் இடமெல்லாம் விதை போல விழுவதும், எழும் இடமெல்லாம் மலைபோல எழுவதுமாக இருந்த சே குவரா சதித்திட்டம் குறித்து அறிந்தும்....

புன்னகைத்தார். தோடர்ந்தும் சீனாவுக்கும் அவ்ஜீரியாவிற்குமாக தன் பயணங்களைத் தொடங்கினார். சென்ற இடங்களிலெல்லாம் அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கிப்பேசினார். ரஷ்யாவையும் ஒரு பிடி பிடித்தார். அமெரிக்காவால் பாதிக்கபடுகின்ற மூன்றாம் உலக குட்டி நாடுகளுக்கு ரஷ்யா பொருளாதார ரீதியில் பாதுகாப்பளிக்க வேண்டியது அதன் தார்மீகக் கடமை என முழங்கினார்.

தொடர்ந்து தான்சானியா கானா, கொங்கோ போன்ற ஆபிரிக்க நாடுகளுக்கும் பயணம் தொடர்ந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் அடக்குமுறை சர்வாதிகாரத்தாலும் ஆபிரிக்க மக்கள் அவதிப்படுவதை நேரடியாக உணர்ந்தார். குறிப்பாக கொங்கோவின் அரசியல் சூழல், அவரை மிகவும் பாதித்தது. மக்கள் புரட்சிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

மூன்று மாத கியூபா அரசால் அங்கீகரிக்கப்படாத பயணத்திற்கு பிறகு சே குவரா 1965 மார்ச்சில் கியூபா திரும்பினார். விமான நிலையத்தில் அவரை பிடல் காஷ்ரோ கை குலுக்கி வரவேற்றார். அதுதான வெளியுலகுக்கு சே குவரா நேரடியாக வெளிப்பட்ட கடைசி நிகழ்வு. அதன் பிறகு சேகுவராவைக் காணவில்லை. எங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை.

அன்றிரவு ஒரு சந்திப்பில், காஸ்ரோவின் தம்பி ரால் காஸ்ரோ சே குவராவை டிராஸ்கியிஸ்ட் என சுடு சொல்லால் அழைத்ததாகவும், அது சே குவராவின் மனதை மிகவும் காயப்படுத்தியதாகவும் அதுதான செகுவராவை கியூபாவை விட்டு வெளியே செல்லக் காரணம் என்றும் சொல்லப்படுவதுண்டு.

சே குவரா எங்கே? பத்திரிகைகள் அலறின. அனைவரது பார்வையும் காஸ்ரோவின் பக்கம் திரும்பியது. சேகுவராவை சுட்டுக்கொன்று விட்டார் காஸ்ரோ எனமளவு கோபம் கிளம்பியது. காஸ்ரோவின் மௌனம் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.

சே குவரா காஸ்ரோ இருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் நிலவியது உண்மை. அடிப்படையில் சேகுவரா ஒரு யதார்த்தவாதி. உள்ளது உள்ளபடியே போட்டு உடைக்கின்ற செயற்புயல். காஸ்ரோ ஒரு ராஜதந்திரி. அரசியல்பூர்வமாகக் காய்களை நகர்த்துபவர். “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது சே குவராவின் உலகம். ஆனால், கியூபாவையும் அதன் மக்களையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பு காஸ்டோவிற்கு. இருவருக்குமிடையிலான முரண்கள் அனைத்துக்கும் இந்த வேறுபாடுகளே அடிப்படை.

உண்மையில் சே குவரா அப்போது காஸ்ரோவுக்கும், அவரது தாய்க்கும் ஒரு கடிதத்தை எழுதி அனுப்பிவிட்டு தனது அடுத்த புரட்சிக்காக கொங்கோ கிளம்பி இருந்தார். காஸ்ரோ எவ்வளவோ முயற்சித்தும் சே குவராவை நிறுத்த முடியவில்லை. “மக்களுக்கான் பணியில் தனது பாதை தொடர்ந்து நீளும். அதனை ஒருபோதும் தடுக்கக் கூடாது” என சே குவரா காஸ்ரோவிடம் உறுதிமொழி வாங்கியிருந்ததும் அதற்கு ஒரு காரணம்.சேகுவரா எங்கே? எனக் கேட்ட யாருக்கும் காஸ்ரோவால் வெளிப்படையாக பதில் சொல்ல முடியவில்லை. காரணம், சி.ஐ.ஏ!

சே குவராவை அழித்தொழிக்கத் தேடிவரும் சி.ஐ.ஏ விற்கு துப்பு கிடைத்துவிடும் என காஸ்ரோ அஞ்சியதே காரணம். வியட்நாமுக்கு சே குவரா சென்றுவிட்டதாக சொன்னதை நம்பி, வியட்நாம் காடுகளில் சே குவராவை சி.ஐ.ஏ தேடி அலைந்து ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்தது. அந்தக் கடுப்பில் சே குவராவை காஸ்ரோ சுட்டுக்கொன்றதற்கு தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகப் பொய்ச் செய்தியைப் பரப்பத்தொடங்கியது. இது காஸ்ரோவிற்கு மிக நெருக்கடியை உருவாக்க அக்டோபர், 03, 1965 ல் பொதுமக்கள் முன்னிலையில் சே குவரா தனக்கு எழுதிய கடிதத்தை அவரது அனுமதியுடன் சே குவரா கியூபாவை விட்டு தான் வெளியேறியதற்கான காரணத்த்தையும் கொங்கோ புரட்சிக்குச் செல்வதையும் குறிப்பிட்டிருந்தார்.

சே குவரா கொங்கோ காடுகளில் துப்பாக்கியுடன் களத்தில் இருந்தார். கியூபா வீர்ர்கள் மற்றும் கறுப்பினப் போராளிகளுடன் கொங்கோவின் சர்வாதிகார அரசை வேரறுக்கும் பணியில் இறங்கியிருந்தார். ஆனால் அவர் நினைத்தது போல் அந்த புரட்சி சே குவராவிற்கு வெற்றி தேடித் தரவில்லை. கொங்கோ நாட்குறிப்புக்கள் எனும் டைரியில் எழுதியிருந்தது போல, அது ஒரு தோல்வியின் வரலாறாக முடிந்தது.

அமெரிக்க சி.ஐ.ஏ கழுகுகள் அவரைத் தேடி கொங்கோ காடுகளுக்குள் புகுந்த போது சே குவரா தனது பட்டாளத்துடன் செக்கோஸ்லாவியாவுக்கு இடம் பெயர்ந்திருந்தார்.

சே குவராவிற்கு மீண்டும் கியூபா செல்ல விருப்பம் இல்லை. பொலீவிய மாவேயிஸ்ட் தலைவரான மோஞ்சேவின் அழைப்பின் பேரில் தன் அடுத்த இலக்கான் பொலிவீயாவுக்குள் 1966 இறுதிவாக்கில் மாறுவேடத்தில் நுழைந்தார். அவருடன் 50 பேர் கொண்ட கெரில்லாப்படையும் புனிதப் பணியில் ஈடுபட்டது. அவருக்கு கொங்கோவைப் போல தோல்வியே காத்ததிருந்தது.

1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்திலேயே ஒர் இருண்ட தினம்
தட்ப வெப்ப சூழ்நிலைகளின் முரண், கலாச்சாரப் புரிதலின்மை, போன்றவை\யே அவரது திட்டங்களின் தோல்விகளுக்கு காரணம். இன்னொரு பக்கம் அவர் யார் யாரை தனது அரசியல் நண்பர்களாக நம்பி இருந்தாரோ, அவர்கள் யாரும் உதவி செய்யாமல், மௌனமாக கைகட்டி வேடிக்கை பார்த்ததும் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. இந்த மனவேதனையுடன் ஆஸ்துமாவும் சேர்ந்து சே குவராவை வாட்டி வதைத்தது. போதிய வீரர்கள் இல்லாதது மற்றும் உணவின்மை போன்ற பிரச்சனைகளுடன் சே குவரா காடுகளில் அலைந்தார். சி.ஐ.ஏ பொலிவியாவுக்குள்ளும் புகுந்தது. பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் என்பவர் தலைமையில் வேட்டையாடத் தொடங்கியது.

1967 அக்டோபர் 8 தென் அமெரிக்கச் சரித்திரத்திலேயே ஓர் இருண்ட தினம்.

காலை 10.30

யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் சே குவரா கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடுமேய்க்கும் குண்டுப்பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார்.

நண்பகல் 1.30..

அந்தக் குண்டுப் பெண் பொலீவிய ராணுவத்திற்கு சே குவராவின் இருப்பிடத்தைக காட்டிக் கொடுக்கிறாள். அலறிப் புடைத்துப் பறந்த வந்த பொலீவிய ராணுவம் சுற்றி வளைத்துச் சராமாரியாகச் சுடத்தொடங்குகிறது. பதிலுக்கு கெரில்லாக்களும் துப்பாக்கிகளால் சுடுகின்றனர்.

பிற்பகல் 3.30

காலில் குண்டடிபட்ட நிலையில், தன்னைச் சுற்றித் துப்பாக்கியுடன் சூழ்ந்த பொலீவிய இராணுவத்திடம் நான்தான் சே குவரா இறப்பதைக் காட்டிலும் உயிருடம் பிடிபடுவது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றார். மாலை 5.30 அருகிலிருந்த லா ஹிகுவேராவிற்கு வீரர்கள் கைத்தாங்கலாக சேகுவராவை அழைத்துவருகின்றார்கள்.

அங்கிருக்கும் பழைய பள்ளிக்கூடம் ஒன்றில் சே குவரா கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறைவைக்கப்படுகிறார். இரவு 7.00 மணி சே குவரா பிடிபட்டார் என சி.ஐ.ஏ வுக்கு தகவல் பறக்கிறது. அதே சமயம் சே குவரா உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக பொய்யான தகவல் பொலீவிய இராணுவத்தால் பரப்பப்படுகிறது.

தனக்கு உணவு வழங்கி வந்த பள்ளி ஆசிரியையிடம் “ இது என்ன இடம்” என்று சே குவரா கேட்கிறார். பள்ளிக்கூடம் என்று அந்தப்பெண் கூற “பள்ளிக்கூடமா? ஏன் இத்தனை அழுக்காக இருக்கிறது? என வருத்தப்படுகின்றார். சாவின் விளிம்பிலும் சேகுவராவின் இதயத்தை எண்ணி அப்பெண் வியந்து போகிறார்.

அக்ரோபர் 9 அதிகாலை 6.00 மணி

லாஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகப்ரர் வட்டமடித்து வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும கமராக்களுடன் பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ உளவாளி இறங்குகிறார்.

கோழையே நீ சுடுவது சே குவராவை அல்ல! ஒரு சாதாரண மனிதனைத்தான் - சே குவராவின் இறுதி வசனம்

கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுக்கடைந்த ஆடைகளுடன் சே குவராவைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது சே குவராதான் என அமெரிக்காவிற்கு தகவல் பறக்கிறது. சே குவராவின் டைரிகள் மற்றும் உடமைகள் கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கமராவில் சேகுவராவை பல கோணங்களில் புகைப்படங்கள் எடுக்கிறார் பெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போல காட்சி தரும் சே குவராவின் அப்புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள்.என்றும் அழியாத போராளியின் இறுதிக்கணங்கள்

காலை 10.00

சே குவராவை உயிருடன் வைத்து விசாரணைகள் நடத்தினால் அவர் மேல் பரிதாபத்தையும், நாயகத்தன்மையும் உருவாக்கி விடும் என்பதால் அவரை உடனடியாக தீர்த்துக்கட்டி விடுவதுதான் சரி என சி.ஐ.ஏ விடம் இருந்து தகவல் வருகிறது.

வாலேகிராண்டாவில் இருந்து வந்த அத்தகவல் 500,600 எனக் குறிச்சொற்கள் தாங்கி வருகிறது. 500 என்றால் சே குவரா 600 என்றால் கொல் என்பவை அதன் அர்த்தங்கள்.

காலை 11.00 மணி

சே குவராவை சுட்டுக்கொல்வது என முடிவெடுக்கப்படுகிறது. யார் அதைச் செய்வது எனக் கேள்வி வருகிறது. “மரியோ ஜேமி” என்ற பொலீவிய இராணுவ சார்ஜன் அக்காரியத்திற்காக பணியமர்த்தப்படுகிறார்.

ஆதனியிடத்திற்கு மரியோ அழைத்துச் செல்கிறார். “முட்டி போட்டு உயிர் வாழ்வதைவிட நின்று கொண்டே சாவது எவ்வளவோ மேல்” என்பார் சேகுவரா. ஆனால் மரியோ அவரை ஒரு கோழையைப்போல் கொல்லத் தயாராகிறார். தன்னை நிற்க வைத்துச் சுடுமாறு சேகுவரா கேட்க, அதை அலட்சியப்படுத்துகிறார்.

கோழையே சுடு! நீ சுடுவது சே குவராவை அல்ல: ஒரு சாதாரண மனிதனைத்தான்!

இதயம் கிழிக்கும் விழிகள் மின்ன உலகம் புகழும் மனிதன் சொன்ன கடைசி வசனம் இதுதான்!

1967, அக்ரோபர், 9 மணி நண்பகல் 1.10

மனித குல விடுதலைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் போராடிய மாமனிதனை நோக்கி துப்பாக்கி திறக்கிறது. ஆறு தோட்டாக்களில் ஒன்று, அவரது இதயத்துக்குள் ஊடுருவியது. இனம், மொழி,தேசம் என எல்லைகளை கடந்து பாடுபட்ட உலகின் ஒரே வீரன் இதோ விடை பெறுகிறான்.

சே குவரா இறந்த தகவல் உலகத்தை உலுக்கியது. அக்ரோபர் 18... கியூபா.. ஹவானாவில் வரலாறு காணாத கூட்டம் சே குவராவின் அஞ்சலிக்காக காஸ்ரோவின் தலைமையில் கூடியிருந்த்தது. அவர்கள் முன் தலைமை உரையாற்றுகிறார் காஸ்ரோ. “வரலாற்றின் மகத்தான பக்கங்களில் இடம்பெற்று விட்ட சே குவரா நம் காலத்தின் ஒப்பற்ற தலைவர். கியூப மக்கள் அந்த மகத்தான தலைவனை முன்மாதிரியாக கொண்டு செயற்பட வேண்டும். என வேண்டுகோள் விடுக்கிறார்.

இறந்தபோது சே குவராவிற்கு வயது 40. உலகம் முழுக்க சேகுவராவின் புகழ் இன்னும் அதிகமாக பரவியது. உலகின் அனைத்து இதழ்களிலும் சே குவரா குறித்துக் கட்டுரைகள் எழுதப்பட்டன. உலகின் பெரும் கவிகளான ஆக்டோவியா பாஸ், ஹூலியா கொத்சார் போன்றவர்கள் சே குவரா குறித்து கவிதைகள் எழுதினர். பிரெஞ்சு அறிஞர் ழான் போல் சார்த்தர், பூமியில் வந்து போன முழுமையான மாமனிதர் சே குவரா என மகுடம் சூட்டினார்.

நிகரகுவாவில் புரட்சி ஏற்பட்டு குவோராயிசம் எனும் கொள்கை கொண்ட சான்டனி ஸ்டாஸ் அரசு, ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் வெற்றி ஊர்வலத்தில் ஏசுவைப் போன்ற சே குவராவின் உருவம் கொண்ட அட்டைகளை அனைவரும் தாங்கிப் பிடித்திருந்தனர்.

கியூப அரசாங்கம் சே குவராவின் நினைவை தொடர்ந்து சமூகத்தின் ஞாபகத்தில் பதியவைக்கும் விதமாக தனது கட்டங்கள் மற்றும் பூங்காக்களில் சித்திரங்களாகவும், சிலைகளாகவும், பல்வேறு உருவ வேலைப்பாடுகளாகவும் நிர்மாணித்து பெருமைப்படுத்தியது. சான்டோ கிளாரா எனும் நகரில் சேகுவராவின் மியூசியம் ஒன்றும் உள்ளது. வருடந்தோறும் மில்லியன் கணக்கில் பயணிகள் வெளிநாடுகளிலிருந்து இந்த மியூசியத்தைப் பார்ப்பதற்காக மட்டுமே கியூபாவிற்கு செல்கின்றனர். கியூபாவில் இப்போதும் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலைகளில் வகுப்பறைக்கு செல்ல முன், அத்தனை குழந்தைகளும் ஒருமித்த வாசகம் என்ன தெரியுமா?

“ஆம் எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தனர். நாங்கள் சே குவராவைப் போல இருப்போம்!”

ஓயாத அலைகள் - 3 பகுதி 4 

அன்று (28/10/99) அதிகாலை மூன்று மணியளவில் கரும்புலிகளின் ஐந்து அணிகள் பயிற்சி நகர்வைத் தொடங்கின. அவர்களுக்கான ஆள்கூறுகள் கொடுக்கப்பட்டிருந்தன. இலக்கு நோக்கிய நகர்வை மக்களின் கண்களில் தட்டுப்படாமல் முடிக்க வேண்டுமென்பதும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

காலை ஆறு மணியளவில் எனக்கொரு பணி தரப்பட்டு குமுழமுனைக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கே ராஜு அண்ணையோடு ஈழவனும் இன்னும் சிலரும் வந்துசேர்ந்தார்கள். பின் அங்கிருந்து ஆண்டாங்குளம் செல்லும் பாதையில் சிறிது தூரம் சென்று வாகனங்களை விட்டுவிட்டுக் காட்டுக்குள் இறங்கினோம். கிட்டத்தட்ட ஒருமணிநேரம் அலைந்து திரிந்து இறுதியில் ஒரு வெட்டைப் பகுதியைத் தேர்ந்தெடுத்தோம். அது வயற்பகுதியோடு சேர்ந்த ஒரு வெட்டை. சற்று இடைவெளிகள் விட்டு ஐந்து நிலையங்கள் எனக்குக் குறித்துத் தரப்பட்டன.

குறித்த அந்த ஐந்து இடங்களிலும் அடையாளத்துக்கு வெவ்வேறு நிறத் துணிகள் கட்டப்பட வேண்டுமென்பதுதான் எனக்குத் தரப்பட்ட பணி. தூரத்திலிருந்து பார்க்கக் கூடியதாக அவை உயர்த்திக் கட்டப்பட வேண்டும். இடங்களைக் குறித்துத் தந்த பின்னர் ராஜு அண்ணன் மற்றவர்களோடு புறப்பட்டுவிட்டார். எனக்கு உதவியாக மூன்று பேர் தரப்பட்டிருந்தார்கள். மாலை மூன்று மணிக்குள் ஐந்து இலக்குகளின் வேலையும் முடிய வேண்டும். அத்தோடு பக்கத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த மக்களையும் அப்புறப்படுத்தி அப்பகுதியில் யாரும் இல்லையென்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

நேரம் மட்டுமட்டாக இருந்தது. இருந்தது ஒரு கத்தி மட்டும்தான். தனியாக நின்ற ஒரு பனையில் அரைவாசியில் ஒரு நிறத்துணியைக் கட்டியும், இன்னோரிடத்தில் பட்டுப்போய் நின்ற முதிரையில் ஏறி ஒரு நிறத்துணியைக் கட்டியும் இரண்டு இலக்குகளை நிறுவினோம். ஏனைய மூன்றும் எப்படியோ வெட்டையில்தான் வருகின்றன. உயரத் தடிகள் ஏதாவது நட்டுத்தான் துணி கட்ட வேண்டும்.

சற்றுத் தள்ளி நீர் தேங்கியிருந்த பகுதியில் மெல்லிய நெடிய மரங்கள் சில நின்றன. தேவையான அளவு உயரமாகவும் மெல்லியதாகவும் இருந்ததால் அவற்றை வெட்டிப் பயன்படுத்தலாமென முடிவெடுத்தோம். தடியை நடுவதற்குரிய கிடங்கைக் கிண்ட எம்மிடம் அலவாங்கு இருக்கவில்லை. பக்கத்திலே மக்கள் குடியிருப்புக்களும் இல்லை. சற்றுத்தள்ளி வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் விசாரித்து அலவாங்கு வாங்கிவரும்படி மற்றவர்களை அனுப்பிவிட்டு நான் கத்தியோடு மரங்களை நோக்கிப் போனேன். அவை என்னவகை மரங்களென்று அன்றுவரை நான் அறிந்திருக்கவில்லை. மூன்று முழுமையான வருடங்களை காட்டில்தான் கழித்திருந்தாலும் இந்தவகை மரத்தை நான் பார்த்ததில்லை. ஒரு மரத்தை வெட்டி இழுத்து வந்தேன். இலகுவாக வெட்டுப்பட்டது எமக்குச் சுலபமாகப் போய்விட்டது.

அலவாங்கு கிடைக்காமல் மற்றவர்கள் திரும்பியிருந்தார்கள். மூன்று மரங்களை முக்காலியாகக் கட்டியென்றாலும் உயர்த்த முடிவெடுத்தோம். நான் மரங்களை வெட்ட மற்றவர்கள் இழுத்துவந்து கட்டி நிமித்த வேண்டும். மளமளவென்று மரங்களை வெட்டினேன். அப்போது ஒரு வித்தியாசத்தை என்னால் உணர முடிந்தது. மூக்கு எரிந்தது. பிறகு கண்களும் எரியத் தொடங்கின. மதிய நேரத்து வெயில் நன்றாகக் கொளுத்திக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் சுவாசிக்கக் கடினமாயிருந்தது. வெட்டப்படும் மரத்திலிருந்து வந்த பால் பட்டதால் தோல் கடிப்பது போலிருந்தது. தேவையானளவு மரங்களை வெட்டியாயிற்று.

மரங்களை உயர்த்திக் கட்ட முற்பட்டபோது என்னால் எதுவும் முடியவில்லை. கண் இமைகளைத் திறக்க முடியாதளவுக்கு எரிவு அதிகரித்திருந்தது. ஏதோ பெரிய பிரச்சினை என்பது மட்டும் தெளிவாகியது. சற்றுத்தள்ளி எல்லைப்படையினர் காவலுக்கிருந்த கொட்டிலுக்கு செளமியன் என்னை அழைத்துச் சென்றான். எனது கண்கள் குருடாகிவிட்டன என்று நான் நினைக்குமளவுக்குத்தான் நிலைமை இருந்தது. அங்கே போனதும்தான் எனக்கு விபரீதம் விளங்கியது.

‘தம்பி, விசயம் தெரியாமல் தில்லை மரத்தைப் போய் வெட்டியிருக்கிறியள்’.

அப்போதுதான் தில்லை மரத்தைப் பற்றியும் அதன் தாக்கத்தைப் பற்றியும் விளங்கிக் கொண்டேன்.

‘முந்தி இந்தியன் ஆமியும் உதுக்குள்ள வந்து விசயம் தெரியாமல் தில்லை மரங்களை வெட்டி ஏழெட்டுப்பேர் மயக்கம் போட்டே விழுந்திட்டாங்கள். பொல்லாத சாமான் தம்பி உது’

ஆனால் கண்கள் குருடாகும் வாய்ப்பு அறவேயில்லை என்பதை அவர் அடித்துச் சொன்னதால் கொஞ்சம் நிம்மதியாகவிருந்தது. அன்று இரவுவரை என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. பக்கத்தில் ஓடிய அருவிக்கரையிலேயே இருந்துகொண்டு அடிக்கடி கண்களைக் கழுவிக்கொண்டிருந்தேன்.

செளமியன் மற்ற மூன்று நிலையங்களிலும் தில்லைத்தடிகள் கொண்ட நிறத் துணிகளைக் கட்டியிருந்தான். எனது வேலை முடிந்துவிட்டதை எழிலுக்கு தொலைத்தொடர்புக் கருவி மூலம் தெரியப்படுத்தினேன். எனக்கு நடந்ததைக் கேள்விப்பட்டு, ராஜு அண்ணையோடு நின்ற எழில் என்னைப் பார்க்க வந்தான். அப்போதுதான் நடக்கப்போகும் திட்டத்தை அறிந்தேன்.

‘அதுசரி என்ன செய்யப் போறியள்? ஓ.பி பயிற்சிதானே?’

‘ஓமோம். ஆனா இந்தமுறை உண்மையாவே செல்லடிச்சு’

எழிலின் .பி பயிற்சியில் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். 50 கிராம் வெடிமருந்துக் கட்டிகளை வெடிக்க வைத்துத்தான் பயிற்சிகள் வழங்கப்படும். .பி பயிற்சியென்பது எறிகணை வீச்சில் திருத்தங்களைச் சொல்லி இலக்கைத் தாக்குவதற்காக வழங்கப்படுவது. தாக்கப்படும் இலக்கை நேரடியாகப் பார்க்கக் கூடியதாக இந்த .பி அணி அல்லது தனியொருவர் நிலையெடுத்திருப்பார். பின்தளத்திலிருந்து அந்த இலக்கை நோக்கி எறிகணைகள் ஏவப்படும். அப்படி ஏவப்படும் எறிகணைகள் சரியாக இலக்கில் விழும் என்று சொல்ல முடியாது. அவை விலத்தி விழும்போது அவற்றின் விலத்தல்களைஇவ்வளவு தூரம் இந்தக் கோணத்தில் விலத்தி அடிக்க வேண்டும் - என்ற வகையில் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அறிவிக்கும் பணியைத்தான் இந்த .பி அணிகள் செய்யும். அவர்கள் சொல்லும் திருத்தத்துக்கு ஏற்ப ஏவப்படும் அடுத்த எறிகணையிலிருக்கும் திருத்தத்தை மீளவும் சொல்வார்கள்.

‘என்னது? செல்லடிச்சுச் செய்யப் போறியளோ? 60 mm மோட்டரோ அடிக்கப் போறியள்?’

‘இல்லை, ஆட்லறியேதான் அடிக்கப் போறம்.’

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எனக்கு மட்டுமில்லை, இதைக் கேட்கும் யாருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். பின்னாட்களில் இது சாதாரணமாக இருந்திருக்கும். ஆனால் அந்த நேரத்தில் ஆட்லறி எறிகணைகளை ஏவியே .பி. பயிற்சி கொடுப்பதென்பது நினைத்துப் பார்க்க முடியாததாகவே இருந்தது.

‘அஞ்சு ரீமுக்கும் செல்லடிச்சுத்தான் குடுக்கப் போறியளோ?’

‘ஓம். ஒவ்வொரு ரீமுக்கும் ஐவஞ்சு செல் ஒதுக்கியிருக்கு. அஞ்சாவதை இலக்கில விழுத்தினாக் காணும்’

ஏற்கனவே அப்பகுதிக்குக் கிட்டவாக வந்து நிலையெடுத்திருந்த ஐந்து அணிகளுக்கும் தனித்தனி இலக்குகளின் ஆள்கூறுகளும் அவர்களின் இலக்குக்குரிய நிறமும் தெரிவிக்கப்பட்டு மிகுதி நகர்வுகளுக்கான ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மாலை மூன்று மணியளவில் தாக்குதல் தொடங்குவது என்று திட்டமிடப்பட்டிருந்தாலும் ஐந்து மணியளவில்தான் முதலாவது அணி இலக்கைக் கண்டடைந்தது. மளமளவென்று வேலைகள் நடந்தன.

அன்றே ஐந்து அணிகளுக்குமான பயிற்சி முடிக்கப்பட வேண்டும். நான்கு அணிகளின் பெறுபேறுகள் திருப்திகரமாக இருந்தன. அந்த நான்கு அணிகளும் தமக்கு ஒதுக்கப்பட்ட ஐந்து எறிகணைகளுக்குள் முழுமையான திருத்தத்தைச் செய்து முடித்திருந்தார்கள். செழியனின் அணிக்குரிய பெறுபேறு மட்டும் திருப்தியாக இல்லை. நேரம் போய்விட்டதால் நாளை அதிகாலை செழியனின் அணிக்கான எறிகணைகளை மீளவும் அடித்துப் பயிற்சியை முடிப்போமென ராஜு அண்ணன் சொன்னார்.

அங்கிருந்து குமுழமுனைப் பாடசாலைக்குத் திரும்பி அங்கே இரவு தங்கினோம். அன்று இரவோடு எனது கண் பிரச்சினை சரியாகிவிட்டதும் குறிப்பிடத் தக்கது. இந்ததில்லைப் பிரச்சினையைக் கேள்விப்பட்ட கடாபி அண்ணன், ‘இது எமக்கு ஒரு பாடம்தான். இனிமேல் எமது பயிற்சித் திட்டத்தில் இந்த தில்லை மரம் தொடர்பிலும் நாம் கற்பிக்க வேண்டும்என்றார்.

குமுழமுனைப் பாடசாலையில் இரவு தங்கியிருந்த போதுதான் அந்தச் செய்தி வந்து சேர்ந்தது. ஏற்கனவேபராக்கிரம புரஇராணுவ முகாமிலுள்ள ஆட்லறிகளைத் தகர்ப்பதற்கான ஆயத்தப்பணிகளில் கரும்புலிகளின் ஒரு தொகுதி ஈடுபட்டிருந்த நிலையில், அம்முகாம் மீதான இறுதி வேவுக்கெனச் சென்றிருந்த அணி தளம் திரும்பிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட எதிர்பாராத மோதலில் கரும்புலி மேஜர் செங்கதிர் வாணன் வீரச்சாவு: மேலும் ஒருவர் காயம் என்ற தகவலே அது. இன்னமும் அந்த அணி பாதுகாப்பாக வந்து சேரவில்லை. இன்றிரவுதான் அவர்கள் எல்லை கடப்பார்கள். காயப்பட்ட கிரியையும் தூக்கிக் கொண்டு அவர்கள் வந்து சேர்வார்களா மாட்டார்களா எனத் தெரியாத நிலை. அன்றைய இரவு உணர்ச்சிமயமாகவே கழிந்தது. அத்தோடு அன்று காலை அம்பகாமம் பகுதியில்நீர்சிந்து – 2’ நடவடிக்கை நடந்து அதில் நிறையப் பெண் போராளிகள் வீரச்சாவடைந்த சம்பவமும் நிகழ்ந்திருந்தது.

29/10/99

மறுநாட்காலை செழியனின் அணிக்கான பயிற்சிகள் வெற்றிகரமாக முடிந்தன. அனைவரும் தளம் திரும்பினோம். கரும்புலிகளுக்கு அன்று முழுவதும் ஓய்வு என அறிவிக்கப்பட்டது. முதல்நாளின் நகர்வில் நிறையப் பேருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டிருந்தன. அவர்களுக்கான சிகிச்சையும் ஓய்வும் வழங்கப்பட்டது. நானும் எழிலும் சசிக்குமார் மாஸ்டரோடு சேர்ந்து சில வேலைகளைச் செய்து கொண்டிருந்தோம்.

அன்றுகாலையே இளம்புலி அண்ணனும் மற்றவர்களும் தளத்துக்கு வந்துவிட்டனர். பராக்கிரம புர முகாமுக்கான வேவுக்கு அவர்தான் பொறுப்பாகப் போய் வந்தார். முதல்நாள் நடந்த மோதலில் செங்கதிர் வாணன் அண்ணன் வீரச்சாவென்பதை அவர் உறுதிப்படுத்தினார். காயப்பட்ட நிலையில் 'நான் குண்டை வெடிக்க வைக்கிறன்' என்று கத்திச் சொல்லிக் கொண்டு தனது M-4 குண்டை வெடிக்க வைத்து தன்னை மாய்த்துக் கொண்டதைச் சொன்னார். காயப்பட்ட கிரியை மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். ‘இவ்வளவு நாளும் போய்வரேக்க ஒரு பிரச்சினையுமில்லை. இப்ப என்னெண்டு இது நடந்தது? அவனுக்குத் தெரிஞ்சு போச்சோ? இனி நடவடிக்கை சரிவராதோ?’ என்று எல்லோரிடமும் கேள்விகளிருந்தன.

ஆனால்இது தற்செயலாதுதான், பயிற்சி நடவடிக்கைக்காக காட்டுக்குள் இறக்கப்பட்டிருந்த இராணுவத்தோடுதான் மோதல் நடந்தது; எமது திட்டம் தொடர்பாக எதுவும் எதிரி அறிந்திருக்க வாய்ப்பி்லைஎன்ற விளக்கத்தை இளம்புலி அண்ணன் சொன்னார்.

அன்று மாலை மூன்றுமணியளவில் திடீரென கடாபி அண்ணன் வந்தார். நடவடிக்கைக்கென பிரிக்கப்பட்டிருந்த ஐந்து அணியைச் சேர்ந்தவர்களை சந்திப்புக்காகப் புறப்படும்படி அறிவுறுத்தப்பட்டது. அது தலைவருடனான சந்திப்பு என்பது அனைவரும் விளங்கிவிட்டது. அந்த ஐந்து அணியைச் சேர்ந்த இருபது கரும்புலிகளும் அன்று இரவு தலைவருடனான தமது சந்திப்புக்காகச் சென்றனர்.

தொடரும்...

ஓயாத அலைகள் - 3 பகுதி 3 

மாதிரி இராணுவ முகாமை அமைத்துவிட்டு அவர்கள் மீளவும் கடற்பயிற்சியைத் தொடரவென கள்ளப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள். கரைச்சிக் குடியிருப்பில் தங்கியிருந்த கரும்புலி அணி சிங்கபுர ஆட்லறித் தகர்ப்புக்கான பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கியது. இப்பயிற்சி பற்றி இத்தொடரின் முதலாவது அங்கத்தில் சற்று விரிவாகப் பார்த்திருந்தோம்.

இந்தத் தாக்குதலுக்கான தயாரிப்பிலும் பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தது கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதி. இதில் கரும்புலி மேஜர் செங்கதிர் வாணன், பின்னாளில் கடலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி லெப்.கேணல் நரேஷ், கரும்புலி மேஜர் அருளன், கரும்புலி மேஜர் மலர்விழி, கரும்புலி மேஜர் சிறிவாணி, கரும்புலி மேஜர் ஆந்திரா ஆகியோர் உட்பட வேறும் சிலர் இருந்தனர். இந்த நடவடிக்கைக்காக அப்போது பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூன்றாவது தொகுதியிலிருந்தும் சிலர் அழைக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக அச்சண்டைக்கென தெரிவு செய்யப்பட்டிருந்த இரண்டு பி.கே. எல்.எம்.ஜி இயக்குநர்களான கரும்புலி மேஜர் ஆதித்தன், பின்னாளில் கடலில் வீரச்சாவடைந்த கரும்புலி மேஜர் நித்தி ஆகியோர் மூன்றாம் தொகுதியிலிருந்து தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

மூன்று அணிகளாக உட்புகுந்து நடத்தும் இத்தாக்குதலை அருளன் நேரடியாகக் களத்தில் நின்று வழிநடத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அம்முகாமிலிருந்து ஆறு ஆட்லறிகளும் தகர்க்கப்பட வேண்டுமென்பது தான் இலக்கு. இலக்கு நிறைவடைந்தால் மீதமுள்ளோர் பாதுகாப்பாகத் தளம் திரும்ப வேண்டுமென்பதும் திட்டமாக இருந்தது. வேவுத் தரவுகளின்படி முகாம் மாதிரி அமைக்கப்பட்டு பயிற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இதேவேளை கரும்புலிகள் அணியினரும் வேவு அணியினரும் இணைந்து தொடர்ந்தும் வேவுப்பணியில் ஈடுபட்டுக்கொண்டுமிருந்தனர்.

இந்நிலையில் அந்தப் பயிற்சித்திட்டத்தில் இணையும்படி எனக்கு அறிவுறுத்தப்பட்டது. கள்ளப்பாட்டில் கடற்பயிற்சியில் இருந்த அணிகளிடமிருந்து விடைபெற்று கரைச்சிக் குடியிருப்புக்கு நகர்ந்தேன். அங்கிருந்தபடியே சசிக்குமார் மாஸ்டரோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தேன். இரவு முழுவதும் பயிற்சி; அதிகாலையில் வீடுவந்து சேர்வோம்.

நீரொழுக்கு நடவடிக்கைகள்

அது 1999 ஆம் ஆண்டின் ஐப்பசி மாதம். அந்த நேரத்தில் போர்க்களம் சற்று அமைதியாக இருந்தது. வன்னியின் நீண்ட முன்னரங்கில் பலமுனைகளிலும் முயன்று இடங்களைக் கைப்பற்ற முடியாமல் சிறிலங்கா இராணுவம் முடங்கியிருந்தது. சிலமாதங்கள் அமைதிக்குப் பின்னர் எதிரிநீரொழுக்கு’ (Water-shed) என்ற பெயரில் அடுத்தடுத்து இரண்டு முன்னேற்ற நடவடிக்கைகளைச் செய்தான். இப்போது எதிரி தனது மூலோபாயத்தை மாற்றியிருந்தான். அதாவது வழமையான முறைகளில் சண்டைபிடிக்காமல் கடுமையான தாக்குதலை நடத்தி புலிகளுக்கு இயன்றவரை உயிரிழப்பை ஏற்படுத்துவதும் பின்னர், பழைய நிலைகளுக்குப் பின்வாங்கிச் செல்வதும் என்பதே இந்தப் புதிய திட்டமாக இருந்தது. ‘வசந்த பெரேராஎன்ற இராணுவத் தளபதியின் நேரடி வழிநடத்தலில் இந்தநீரொழுக்கு -1, 2’ ஆகிய இரு நடவடிக்கைகளும் நடத்தப்பட்டன.எதிரி நினைத்தது போல் பெரிய வெற்றியாகவே இவை இரண்டும் அமைந்திருந்தன. மிகக்குறுகிய அகலத்தில் (அண்ணளவாக இரு கிலோமீற்றர்கள்) புலிகளின் காவலரண் வரிசைமீதும் பின்தளங்கள் மீதும் சரமாரியான ஆட்லறித் தாக்குதலை நடத்திவிட்டு முன்னேறிச்சென்று சடலங்களைக் கைப்பற்றிக் கொண்டு பின்வாங்கிச் செல்வதே இந்தத் திட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்ட தந்திரம். அதுவரை எதிரி பயன்படுத்தியிராத அளவுக்கு ஆட்லறி எறிகணைகள் இந்நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான எறிகணைகள் இடைவெளியின்றி மிகக்குறுகிய இடத்தின் மீது ஏவப்பட்டன. ஒருமணி நேரம் நடத்தப்படும் இத்தாக்குதலின் பின்னர் எதிரியணிகள் முன்னேறிச் சென்று காவலரண்களைக் கைப்பற்றும். வீரச்சாவடைந்த போராளிகளின் உடல்களையும் ஆயுத தளபாடங்களையும் தூக்கிக் கொண்டு, காவலரண்களையும் அழித்துவிட்டு எதிரியணிகள் தாமாகவே தளம் திரும்பிவிடும்.

இந்த இரு நடவடிக்கைகளிலும் மாலதி படையணியே தாக்குதலுக்கு உள்ளானது. இயக்கம் இதுவரை எதிர்கொள்ளாத அளவுக்கு ஆட்லறி மழை பொழியப்பட்டது. இரண்டு நடவடிக்கைகளிலும் ஐம்பது வரையான போராளிகளின் உடல்கள் சிறிலங்காப் படையினரால் கைப்பற்றப்பட்டுச் செல்லப்பட்டன. வழமையாகவே போராளிகளின் உடல்கள் எதிரியால் கைப்பற்றப்படுவது ஈழப்போராட்டத்தில் சகிக்க முடியாத தோல்வியாகக் கருதப்பட்டு வந்தது. இந்தப் புது நடவடிக்கையால் போராளிகள் உண்மையில் குழம்பித்தான் போனார்கள். மீட்பு நடவடிக்கைக்கோ தாக்குதலுக்கோ மேலதிக அணிகள் நகர முடியாதளவுக்கு எறிகணை வீச்சு மட்டுமல்லாமல், மிக விரைவாகவே எதிரி தமது தளத்துக்குப் பின்வாங்கிச் செல்வதும் குழப்பமாக இருந்தது.

நீரொழுக்கு -1’ நடவடிக்கை 14/10/1999 அன்று நடத்தப்பட்டது. இதில் நாற்பதிற்கும் மேற்பட்ட பெண் போராளிகள் வீரச்சாவடைந்தனர்; 32 வித்துடல்கள் எதிரியால் கைப்பற்றப்பட்டு சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இயக்கத்திடம் கையளிக்கப்பட்டன. இந்த முதலாவது நடவடிக்கையில் இயக்கத்தின் ஆட்லறி நிலையும் தாக்குதலுக்கு உள்ளானது. அதில் ஆட்லறிக்குச் சேதமில்லை எனினும் எறிகணைக் களஞ்சியம் தீப்பற்றியதுடன் இரு போராளிகள் எரிகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர். ‘நீரொழுக்கு -2’ நடவடிக்கையிலும் நாற்பது வரையான பெண் போராளிகள் வீரச்சாவடைந்தனர். 28/10/1999 அன்று நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 28 வித்துடல்கள் எதிரியால் எடுத்துச் செல்லப்பட்டு சர்வதேசச் செஞ்சிலுசைச் சங்கம் மூலம் இயக்கத்திடம் கையளிக்கப்பட்டன.

இரண்டு கிழமைகளுக்குள் அடுத்தடுத்து அம்பகாமம் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இந்த இரு நடவடிக்கையாலும் ஒருவித அதிர்ச்சி பரவியிருந்தது. இதேபோன்று தொடர்ந்தும் பல தாக்குதல்கள் அடுத்தடுத்து நடத்தப்படப் போகின்றன என்பதும் தெளிவாகத் தெரிந்திருந்தது. எதிரி உச்சக்கட்ட உளவியற் போரைத் தொடுத்திருந்தான். வன்னியில் பெரும்பாலான மக்களும்குறிப்பாக எதிரியின் முன்னணி நிலைகளுக்குக் கிட்டவாக வாழ்ந்த மக்கள் நம்பிக்கையிழந்திருந்தனர். இரண்டொரு நாட்களில் தமது இடங்களை இராணுவம் கைப்பற்றிவிடுமென்று அவர்கள் நம்பினார்கள். களமுனையிலிருந்த போராளிகளுக்கும் குழப்பமாகவே இருந்தது. இந்தப் புது முயற்சியை எப்படி எதிர்கொள்வதென்பது பெரிய புதிராகவே இருந்தது. இன்னும் ஒரு கிழமைக்குள் அடுத்தகட்ட நடவடிக்கையையும் எதிரி முன்னெடுப்பான் என்பதை அனைவரும் விளங்கிவைத்திருந்தனர்.

கரும்புலிகளின் புதிய திட்டம்

இந்நிலையில், நீரொழுக்கு -1 நடவடிக்கையின் பின்னர் சிங்கபுர ஆட்லறித் தகர்ப்புக்கான பயிற்சித் திட்டம் சூடு பிடித்தது. இந்தத் தாக்குதலுக்கான தேவை இப்போது அவசரமாகவும் அவசியமாகவுமிருந்தது. ஆகக் கடைசிக்கட்ட வேவுக்காக இளம்புலி அண்ணனோடு கரும்புலிப் போராளிகள் சிலர் சிங்கபுர போயிருந்த நிலையில் மிகுதிப்பேரோடு இறுதிக்கட்டப் பயிற்சி நடந்து கொண்டிருந்தது.இதேவேளை முல்லைத்தீவுச் சந்தியிலிருந்து கடற்கரை செல்லும் பாதையில் விடுதலைப் புலிகளின் இன்னோர் அணியும் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்தது. லெப்.கேணல் தூயவன் (யாழ்ப்பாணம் செல்லும் வழியில் நீரில் மூழ்கிச் சாவடைந்தார்) தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடவடிக்கையில் ஈடுபடும் அரசியற்றுறையைச் சேர்ந்த அணியே அது. வசந்தன் மாஸ்டர் தலைமையில் (எல்லாளன் படத்தில் பயிற்சி ஆசிரியராக வருபவர்; வன்னியில் நிகழ்ந்த இறுதிநேரப் போரில் முக்கிய பங்காற்றி வீரச்சாவடைந்தார்; இவரைப் பற்றித் தனியே எழுதப்பட வேண்டும்) அங்கே பயிற்சி நடந்துகொண்டிருந்தது. அந்தப் பயற்சித் திட்டத்திலும் இடையிடையே கலந்துகொள்ள வேண்டிய நிலை எனக்கிருந்தது.

இந்நிலையில் 27/10/1999 அன்று காலை எட்டு மணியிருக்கும். அன்று அதிகாலை முடித்த பயிற்சியின் அசதியில் மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அன்றைய இரவுதான் இறுதியான மாதிரிச் சண்டைப்பயிற்சி என்பதால் அதற்கான ஆயத்தங்களில் நானும் சசிக்குமார் மாஸ்டரும் ஈடுபட்டிருந்தோம். திடீரென்று பார்த்தால் கள்ளப்பாட்டிலிருந்த அணிகளெல்லாம் இங்கே வந்துகொண்டிருந்தார்கள். இங்கு வருவதற்கு அவர்களுக்கு அனுமதியில்லையென்பதால் ஓடிச்சென்று மறித்து விசாரித்தால் அவர்களுக்கு அப்படித்தான் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது சைக்கிளில் எழில் வந்துகொண்டிருந்தார். எழில், இம்ரான்-பாண்டியன் படையணியில் வழிகாட்டிப் பயிற்சி நெறிக்குப் பொறுப்பாக இருந்தார்.

மாஸ்டர், கடாபி அண்ணையும் வந்துகொண்டிருக்கிறார். இவையளைப் பாத்து எங்கயாவது இருக்கவிடுவம். அவர் வந்து கதைப்பார்’ – இது எழில்.

கடற்பயிற்சியிலிருந்து வந்திருந்த அணிகளை முன்வீட்டில் இருத்தினோம். சற்று நேரத்தில் கடாபி அண்ணை வந்துவிட்டார். எழிலோடும் சசிக்குமார் மாஸ்டரோடும் தனியே கதைத்தபின் கடற்பயிற்சியிலிருந்து வந்திருந்த அணிகளோடு கதைத்தார்.

இன்றோடு உங்களுக்குரிய கரும்புலிகளுக்கான அடிப்படைப் பயிற்சிகள் முடிவடைந்து விட்டன. இப்போது நீங்கள் அனைவரும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டது. மிக அவசரமாக நாங்கள் ஒரு தாக்குதலை சிறிலங்கா அரச படைகளுக்கு எதிராகச் செய்தாக வேண்டும். நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருக்கிறது. போராட்டப் பாதையில் தடைக்கற்களை உடைக்கும் கடமை கரும்புலிகளுடையது. அவ்வகையில் இப்போது உங்களுக்கான நேரம். உங்கள் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும். இரண்டொரு நாட்களுள் நாங்கள் தாக்குதலுக்காகச் செல்ல வேண்டும். ஓய்வுக்கான நேரமின்றி பயிற்சிகள் வழங்கப்படும். அனைத்தையும் தாக்குப்பிடித்துத் தேறுங்கள், வெல்லுங்கள்என்பதே அவரின் சுருக்கப் பேச்சாக இருந்தது.

ஏற்கனவே சிங்கபுர மீதான தாக்குதலுக்கெனப் பயிற்சியெடுத்துக் கொண்டிருந்த இரண்டாம் தொகுதிக் கரும்புலி அணியும் தற்போது கடற்பயிற்சியிலிருந்து வந்திருந்த மூன்றாம் தொகுதி கரும்புலிகள் அணியும் எதிரெதிர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டிருந்த போதும் இவர்கள் யாரும் மற்ற அணியினருடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை. கடாபி அண்ணன் வந்த கணத்திலிருந்து அனைத்தும் துரித கதியில் நடக்கத் தொடங்கின. அவர் நவீனவகை GPS கருவிகளைக் கொண்டுவந்திருந்தார். இயக்கத்தில் தொன்னூறுகளின் தொடக்கத்திலிருந்தே GPS பயன்படுத்தப்பட்டு வந்திருந்தாலும் இப்போது உலகில் சந்தைக்கு வந்திருக்கும் ஆகப்பிந்திய வடிவத்தையே கடாபி அண்ணன் கொண்டு வந்திருந்தார். ‘XL 2000’ என்ற பெயரில் வந்த அவ்வடிவம் அதுவரை இயக்கத்தால் பயன்படுத்தப்பட்டு வந்த வடிவங்களை விட மிகமிகத் துல்லியமானது; மேம்பட்ட பல வசதிகளைக் கொண்டிருந்தது.

அந்த GPS கருவி தொடர்பான விளக்கத்தையும் பயற்சியையும் வழங்குவதற்கு எழில் வந்திருந்தார். கரும்புலி அணியிலிருந்து ஐந்துபேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு GPS பயிற்சி வழங்கப்பட்டது. ஏனைய அனைவருக்கும் ஆட்லறிப் பயிற்சி வழங்கப்பட்டது. ஆம்! அன்று அதிகாலையே நாங்கள் தங்கியிருந்த வீட்டின் பின்பக்கம் 85 mm ஆட்லறி (புளுக்குணாவ முகாமில் கைப்பற்றப்பட்டது) கொண்டுவரப்பட்டிருந்தது. யாருக்கும் முழுமையான திட்டம் சொல்லப்பட்டிருக்கவில்லை.அன்று 27 ஆம் திகதி பகல் முழுவதும் ஆட்லறிப் பயிற்சியும் GPS பயிற்சியுமே நடந்து கொண்டிருந்தன. நீரொழுக்கு -1 நடவடிக்கையில் எமது ஆட்லறி நிலை தாக்கப்பட்டது பற்றியும் ஆட்லறிப் பயிற்சி வழங்க வந்திருந்தவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். மறுவளத்தில் தெரிவு செய்யப்பட்ட ஐவருக்கும் GPS பயிற்சியை எழில் கொடுத்துக் கொண்டிருந்தார். அன்றிரவு நடக்க இருந்த சிங்கபுர மாதிரி முகாம் பயற்சியை நிறுத்தும்படியும், இதுவரையான பயிற்சியோடேயே முகாமைத் தாக்கலாமென்றும் காடபி அண்ணன் சொல்லியிருந்தார். ஆனால் தாக்குதலணியினர் அதை நம்பவில்லை. ஏற்கனவே சிலதடவைகள் இப்படி இடைநிறுத்தப்பட்டது போல்தான் இந்தமுறையில் இடைநிறுத்தப்படுகிறது என்று ஊகித்திருந்தனர். அத்தோடு மூன்றாம் தொகுதியினர் அவசர அவசரமாக வரவழைக்கப்பட்டு ஓய்வின்றி பயிற்சிகள் வழங்கப்படுவதிலிருந்து ஏதோ வித்தியாசமாக நடக்கிறதென்று அவர்கள் கருதியிருந்தனர்.

இயக்கத்தின் ஆட்லறியை எதிரி தாக்கியதற்குப் பழிவாங்கும் முகமாக எதிரியின் ஆட்லறிகள் சிலவற்றை உடனடியாகத் தாக்கியழிக்க இயக்கம் முடிவெடுத்துள்ளது என்ற கதை மூன்றாம் தொகுதியினரிடம் பரவியிருந்தது. ஏற்கனவே, ஆட்லறிகளைத் தகர்க்கத்தான் இரண்டாம் தொகுதியினர் மாதக்கணக்கில் முயன்றுகொண்டிருக்கிறார்கள் என்ற விடயம் அவர்களுக்குத் தெரியாது. இரண்டு அணியினரின் பயிற்சிகளையும் தெரிந்த எமக்கோ இன்னும் குழப்பம் தான். ஒரே நேரத்தில் பல ஆட்லறித் தளங்களை இயக்கம் தாக்கப் போகிறதா? இல்லாவிட்டால் இப்படிப் பெருந்தொகையானோர் ஈடுபடுத்தப்பட வேண்டிய தேவையில்லையே? இப்படி அதிகம் யோசித்துக் கொண்டிருக்க உண்மையில் எமக்கு நேரமிருக்கவில்லை. அவ்வளவுக்கு வேலை தலைக்குமேல் நிறைந்திருந்தது.

27 ஆம் திகதி முழுமையாகவும் பயிற்சியோடே கழிந்த நிலையில் 28 ஆம் திகதி விடிந்தது. அன்று நகர்வுப் பயற்சியும், ஆட்லறிச் சூட்டுப் பயிற்சியும் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. மிக அலைச்சல் மிகுந்த நாளாக அன்றைய நாள் இருந்தது. மறுபக்கத்தில் அம்பகாமத்தில் நீரொழுக்கு -2 நடந்ததும் அன்றுதான். அன்றைய நடவடிக்கை வன்னியில் பெரிய கிலேசத்தை உண்டுபண்ணியது.

தொடரும்.

இடுகையிட்டது வன்னியன்

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ

கனகரட்ணம் ஸ்டான்லி ஜூலியன் - மன்னார்
 

வீரப்பிறப்பு: 25-07-1974
வீரச்சாவு : 11-08-2006

இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும்சேர்ந்து தேசபக்தர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பிரதேசத்தில் யூலியனின் தந்தை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாடசாலைக்குள் புகுந்த இராணுவத்தினர் யூலியனைக் காட்டித்தரும்படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பாடசாலை செல்லாத யூலியன் தப்பித்துக் கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக்கடை ஒன்றில் தற்காலிகமாகப் பணிக்கு அமர்த்தப் படுகின்றான். முதல்நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் கதிரையொன்றில் அமர்ந்திருக்கின்றான்.

அங்குவந்த முதலாளி "கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் அமர்ந்திருக்கலாம்?" என ஏசுகின்றார். "நான் எனது ஆசிரியர்களுக்கு மட்டும்தான் எழுந்து மரியாதை கொடுக்கிறனான்" எனக் கூறியவன் எவருடைய உதவியுமின்றி மீண்டும் தாயிடம் வந்து சேருகின்றான்.

"
அம்மா இப்படி அடிமையாகச் சிறுமைப்படுவதிலும் பார்க்க நான் இயக்கத்திற்குப் போகப்போறன்" என அனுமதி கேட்கின்றான். அன்னை மௌனமாக இருக்கின்றாள். அங்கிருந்த உறவினர்கள் அழுகின்றார்கள். "நீங்கள் அழுதுகொண்டு இருக்கையில் நான் இயக்கத்திற்குப் போகமாட்டன். ஆனால் விரைவில் போயிருவன்" என்றவன் ஒருநாள் இயக்கத்தில் இணைந்துவிட்டான்.

உயிராபத்துக்களை உதாசீனம் செய்து, போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மிகவும் ஆதரவான வீட்டிலிருந்து, இவன் இயக்கத்தில் இணைந்தது, முகாம் பொறுப்பாளரைச் சங்கடத்திற்கு உள்ளாக்கியது. "நீ வீட்ட திரும்பிப் போ" எனக் கூறுகின்றார். "இல்லை நான் அம்மாவிட்ட சொல்லிப் போட்டுத்தான் வந்தனான்." எனப் பதிலளிக்கின்றான். இதனை உறுதிப்படுத்த பொறுப்பாளர் தாயைச் சந்திக்கின்றார். மகனின் கூற்றை உண்மையாக்க விரும்பியவள் "ஓம் என்னட்ட சொல்லிப் போட்டுத்தான் வெளிக்கிட்டவன்" எனக் கூறுகின்றாள்.

முழுமையான போராளியாக மணலாற்றுக் காட்டினுள் இவனது போராட்ட வாழ்க்கை பூட்டோ எனும் பெயருடன் தொடங்கியது. காட்டு வாழ்க்கை, கடினப் பயிற்சிகள் கடந்து வேவுப்புலியாகப் பரிணமிக்கின்றான். காடுகளையும் எதிரிமுகாம்களையும், காவலரண்களையும் கால்களால் நடந்து அளந்து கணிக்கின்றான். ஒரு நாள் ஏழு பேர் கொண்ட வேவு அணியை வழிநடத்தியவாறு, வனப்பாதுகாப்பு வலயத்தின் சுற்றயல் பகுதியை கண்காணித்துக் கொண்டு வருகின்றான். ஒரு இடத்தில் சூழலுக்குப் பொருத்தமற்ற முறையில் புற்கள் மடிந்திருப்பதை அவதானிக்கின்றான். எதிரி தமது பகுதிக்குள் புகுந்துவிட்டதாக கூறுகின்றான். மற்றவர்கள் அதனை மறுதலிக்கின்றனர்.

இவனோ அப்பகுதியில் அண்மையில் தான் புதைத்து வைத்த மிதிவெடியொன்றைத் தோண்டி எடுக்கின்றான். எதிரி மீண்டும் அப்பாதையைக் கடப்பானாயின் எங்கு பாதம் வைப்பான் என்பதைக் கணிக்கின்றான். அவ்விடத்தில் மிதிவெடியை வைத்து உருமறைத்து விடுகின்றான். தொடர்ந்து நகர்கின்றார்கள். சிறிது நேரத்தில் வெடிச்சத்தம் ஒன்று கேட்கின்றது. ஏனையவர்கள் காட்டு விலங்கு ஏதும் மிதிவெடியில் சிக்கியிருக்கும் என கருத்துத் தெரிவிக்கின்றனர். அதனை மறுதலித்தவன் அவர்களையும் அழைத்துக் கொண்டு அவ்விடம் திரும்புகின்றான். அங்கு இரத்தம் சொட்டியபடியே இராணுவப் பாதணியுடன் துண்டிக்கப்பட்ட கால் ஒன்று கிடக்கின்றது. பின்னர் வந்த நம்பகமான தகவல் மூலத்திலிருந்து தெரியவந்தது. இவர்களுடைய காட்டுமுகாமைச் சுற்றிவளைத்து தாக்கியழிப்பதற்காகத் தங்களது வேவு தகவல்களை இறுதியாக உறுதி செய்ய வந்த இராணுவ அதிகாரி ஒருவர்தான் மிதிவெடியில் சிக்கியது என்பது. இவனது சமயோசிதச் செயற்பாட்டால் பல போராளிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது.

இவ்வாறான பல பதிவிலுள்ள, பதிவில் இல்லாத நிகழ்வுகளின் ஊடாக இவன் ஒரு இராணுவ விற்பன்னனாக வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. மணலாறு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பல்வேறு முகாம் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என்பனவற்றிற்கு வேவு எடுத்தும், அணிகளை வழிநடத்தியும் போராட்டத்திற்கான தன் பங்களிப்பை மேம்படுத்திக் கொண்டான். இக் காலகட்டத்தில் ஒரு சண்டையில் தனது இடதுகைப் பெருவிரலையும் இழந்திருந்தான்.

இயல்பாகவே இவனிடம் இருந்த சித்திரம் வரையும் ஆற்றலால் இவன் வரைபடப் பகுதிக்குள் உள்ளீர்க்கப் பட்டான். வேவுத்தகவல்களை வரைபடங்களாக்கி துல்லியமான விபரங்களைக் கொடுத்து பிரதம தளபதிகளின் தாக்குதல் திட்டமிடல்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தான். இயற்கையாகவே இவனிடம் இனிமையாகப் பாடும் திறனும், கவிதை யாக்கும் வல்லமையும் கைகூடியிருந்தது. வனமுகாம்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்குகொண்டு கலையாற்றல்களை வெளிப்படுத்தி, போராளிகளை மகிழ்விக்கவும் செய்தான். இயக்கத்தில் கலையரசன் எனும் பெயரையும் பெற்றான்.

சமகாலத்தில் போராயுதத் தளபாடங்களையும், நவீன இராணுவ உபகரணங்களையும் தன்னுடன் பழக்கப் படுத்தினான். அவற்றின் உச்ச பயன்பாட்டைப் பெறும்வகையில் தன்னை தகவமைத்துக் கொண்டான். தொடர்ந்து பூநகரி, கொக்குத்தொடுவாய் இராணுவ முகாம்களின் வேவுகளை எடுத்து அவற்றின் மீதான தாக்குதல்களை உறுதிப் படுத்தினான். இப்பொழுது இவன் பல அணிகளை வழிநடத்தும் அணித்தலைமைப் பொறுப்பை வகிக்கத் தொடங்கியிருந்தான்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை தொடர யாழ்நகரம் கைவிடப்பட, இவன் உள்நின்ற போராளிகளுடன் கலந்திருந்தான். இவனது போராவலைத் தீர்ப்பதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தது. ஒருமுறை நடவடிக்கையின் நிமிர்த்தம் பண்ணைக் கடலினூடு நீந்திக் கொண்டிருந்தான். அப்பொழுது அழற்சியை ஏற்படுத்தக்கூடிய, நச்சுக் கடற்தாவரம் ஒன்றினால் தாக்கப் பட்டிருந்தான். உடல் முழுவதும் தடித்து மூச்சு விடுவதையும் சிரமம் ஆக்கியது. ஒருவாறு சிரமப்பட்டு கரையொதுங்கியவன் ஒருவாரத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் களம் சென்றான்.

முல்லைத்தீவுச் சமர் தொடங்கிவிட்டது. "பூட்டோ... பூட்டோ!" என தொலைத் தொடர்பு சாதனத்தில் தளபதி பால்ராஜ் அழைப்பது கேட்கின்றது. ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் திருப்புமுனைத் தாக்குதல் அது. நாங்கள் வென்றே ஆகவேண்டும் சர்வதேசத்திற்கான தமிழீழத்தின் கடற்பாதை திறக்கப்பட்டே ஆகவேண்டும். முகாம் துடைத்தழிப்பை பூரணப்படுத்தப்பட வேண்டும். அதற்காக வேவில் வரைபடத்துறையில், தாக்குதல் அனுபவங்களில், நெருக்கடி நேரங்களில் சரியான முடிவெடுக்கும் வல்லமையைப் பலமுறை நிரூபித்திருந்த பூட்டோ களநிலை அவதானிப்பாளராகவும், டாங்கிக்கான ஒருங்கிணைப்பாளராகவும் களத்தினுள் இறக்கப் பட்டிருந்தான்.

இவனது செயற்பாட்டால் பகைமுகாம் வீழ்த்தும் முயற்சி துரிதப்படுத்தப் பட்டது. பெரும்பாலான முகாம் பகுதிகள் வீழ்ந்து விட்டன. ஒரு கட்டடத்தினுள் பல இராணுவத்தினர் ஒளிந்திருந்து தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களைச் செயல் முடக்கம் செய்ய வேண்டும். பூட்டோ டாங்கியைத் தாக்குதலுக்கு ஆயத்தம் செய்து அதன் மூலம் சில சூடுகளை வழங்க ஆணையிட்டான். பகைவன் பதுங்கியிருந்த கட்டடம் அப்படியே தகர்ந்து இறங்கியது. பெரும்பாலான இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டனர். தொடர்ந்து தாக்குதலை நடாத்தி வெற்றியை உறுதிப்படுத்தும்படி களமுனைத்தளபதி கட்டளையிட்டார்.

அவ்வாறு செய்ய முற்படுகையில் அவனது உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. மீண்டும் சூழலை அளவெடுக்கின்றான். மின்னல் என பொறி தட்டியது. டாங்கிக்குப் பக்கவாட்டாக இருக்கும் மண்ணரணில் இடைவெளி தென்பட்டது. எக்காரணம் கொண்டும் டாங்கி இழக்கப்பட முடியாத இயக்கத்தின் இராணுவச் சொத்து. டாங்கியை வேகமாகப் பின்னகர்த்தி பாதுகாப்பிடம் செல்ல உத்தரவிட்டான். டாங்கி சடுதியாகப் பின்னகரவும் குறித்த மண்ணரன் இடை வெளியூடு ஆர்.பி.ஜி கணை ஒன்று எகிறி வந்து இலக்குத் தவறித் தாண்டிச் செல்லவும் சரியாக இருந்தது. கணநேர முடிவில் இயக்கத்தின் இராணுவப் பலங்களில் ஒன்றைப் பாதுகாத்து தொடர்ந்த பல வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணமாகின்றான்.
ஓயாத அலை 1 வெற்றியில் தமிழீழம் திளைத்திருந்தது. தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்கத் தொடங்கினர். சிங்களம் தோல்விக்குச் சப்பைக்கட்டுக் கட்டிக் கொண்டிருந்தது. அவ்வேளை முல்லைத்தீவு முகாமில் எடுக்கப்பட்ட பொருட்களின் தவறான பிரயோகம் சம்பந்தமாக பூட்டோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். அவனை அறிந்திருந்த அனைவருக்குமே விளங்கியிருந்தது. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என நிரூபிக்கும் என. ஆனால் அதுவல்ல இங்கு முக்கியம், அர்ப்பணிப்பும் செயற்திறனும் உள்ள அப்போராளிக்கு இச்செயல் மனவுடைவை ஏற்படுத்தலாம். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாகவே சம்பவங்கள் நடந்தேறின. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என்றது.

தொடர்ந்து என்ன செய்யப் போகிறீர்கள்? விரும்பினால் தண்டனை இல்லாமல் வீட்ட போகலாம் என பொறுப்பாளர் தெரிவித்தார். மெலிதாகச் சிரித்தான். 'நான் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கிறன்' எனக் கூறினான். அப்பொழுது பொறுப்பாளர் அப்ப சரி வரிப்புலி சீருடையைப் போடுங்கோ அண்ணை உங்களைச் சந்திக்க வரட்டாம்".

'
நான் தவறு செய்யமாட்டன் என்பதைத் தலைவர் நம்பினார். இதுபோதும் சாகும்வரை இயக்கத்தில் இருந்து செயற்படுவதற்கு' என தன்னுள் எண்ணியவன் தலைவரைச் சந்தித்தபின் தொடர்ந்து களப்பணியாற்றுகின்றான். பலமாதங்களுக்கு முன்னர் கரும்புலி அணியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துக் கடிதம் அனுப்பியிருந்தான். அதற்கான அனுமதி கிடைத்திருந்தது. ஆபத்துக்களை கடந்து செய்யப்படும் தனது கடின உழைப்பில் மனத்திருப்தி கிடைக்காதவன் கரும்புலியாகச் செயற்படுவதில் அதனை அடையலாம் என நம்பினான்.

தொடர்ந்து கரும்புலிகளுக்கான உடல் உள உறுதிகளை உறுதிப்படுத்தும், தாங்குதிறனைப் பரிட்சிக்கும் பயிற்சிகளைப் பெற்றுத் தன்னைக் கரும்புலி அணித்தலைவர்களுள் ஒருவனாக்கிக் கொள்கிறான். இப்பொழுது கரும்புலியாகவும், வேவுவீரனாகவும் தனது அனுபவங்களை ஒருங்கிணைத்துச் செயற்படுகின்றான். வரையறைக்குட்பட்ட முறையில் முடிவெடுக்கும் அதிகாரத்துடன் எதிரி முகாம்களினுள் ஊடுருவி இலக்குத்தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். முல்லைத்தீவு வெற்றியைப்போல், பூரண வெற்றியைத் தரக்கூடிய புறச்சூழலுடன் அமைந்திருப்பது பூநகரி இராணுவத்தளம். ஏற்கனவே அதனுடன் இவனுக்கிருந்த பரீட்சயம் காரணமாக அதனை வேவு எடுக்கப் புறப்படுகின்றான். அனுபவம் வாய்ந்த வேவுப்புலிக்கு இராணுவ முகாமொன்றின் காவலரணுக்கு அண்மையாகச் சென்று அதனுள் எட்டிப்பார்ப்பதென்பது திகில் நிறைந்த விருப்பிற்குரிய செயற்பாடு ஆகும்.

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஒரு காவலரணுக்கு உள்ளே எட்டிப் பார்க்கின்றான். இராணுவ நடமாட்டத்தைக் காணவில்லை. அடுத்த காவலரணினுள்ளும் சென்று பார்க்கின்றான். அதுவும் அவ்வாறே காணப்படுகின்றது. சிறிதுநேரத்திற்கு முன்னர்வரை இராணுவத்தினர் இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டன. இவனுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. மெல்ல முகாமின் உட்பகுதிக்குள் செல்கின்றான். அம்முகாமின் வெதுப்பகத்தில் நெருப்புத்தணல் காணப்படுகின்றது. ‘பாண்களும்அவ்வாறே கிடக்கின்றன. ஆள் நடமாட்டம் தான் இல்லை. பூரணமாக விளங்கி விட்டது. அங்கிருந்தவர்களுக்கான முன்னறிவிப்பு இன்றியே அம்முகாம் பின்வாங்கப்பட்டு விட்டது என்பது. இரவோடு இரவாக பலவாயிரம் இராணுவம், கடற்படையினர் இருந்த முகாம் வெறுமையாகி விட்டது. இது எங்களுக்குத் தெரியாமல் இருந்து விட்டது? என தன்னுள் எண்ணியவன் தொடர்பெடுத்து தனது முகாம் பொறுப்பாளருக்கு நிலைமையை அறிவிக்கின்றான். மேலும் உறுதிப்படுத்தும்படி அவர் கேட்க, தான் உறுதிப்படுத்தியவற்றைத் தெரிவித்தான். முகாம் பின்வாங்கும் முடிவெடுத்த முலோபாய முடிவுகள் எடுக்கும் எதிரித்தளபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்தபடி வெளிவருகின்றான்.

ஜெயசிக்குறுஇராணுவ நடவடிக்கை மூர்க்கமுடன் தொடர்கின்றது. அதனைத் தடம்புரளச் செய்யும் தந்திரோபாய நடவடிக்கையாகவும் போராட்டத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சலாகவும் கிளிநொச்சி இராணுவ முகாம் வீழ்த்தப்பட வேண்டும். இந்நடவடிக்கையின் வெற்றியை உறுதிப்படுத்தவும், வேகப்படுத்தவும் என கரும்புலிகள் போரணியொன்று ஆனையிறவு இராணுவத்தளத்தினுள் ஊடுருவியது. இவர்களின் இலக்காக ஆனையிறவு தளத்தினுள் குழப்பத்தினை ஏற்படுத்துவதன் மூலம் கிளிநொச்சி இராணுவத்தினருக்கான விநியோகத்தைத் தடுப்பது, கட்டளைகளைக் குழப்புவது என்பன அமைந்திருந்தது. கொமாண்டோ பாணியிலான உட்தாக்குதல் ஆரம்பித்துவிட்டது.

பூட்டோவினால் எதிரி முகாமின் மையத்திலிருந்த தொலைத் தொடர்புப் பகுதி செயலிழக்கச் செய்யப்பட்டது. இவனது அணித்தலைவர்கள் வீரச்சாவடைய இவனும் இடது கையில் காயப்பட்டு என்பு முறிவிற்குள்ளாகினான். இதனால் சார்ச்சர் பட்டியை இழுத்துக் கொழுவித் தன்னைத்தானே தகர்த்து அழிக்கும் முயற்சி சாத்தியமற்றுப் போனது. எனவே தப்பிக்கும் முடிவெடுக்கின்றான். உள்ளே காயமடைந்திருந்த ஏனைய வீரர்களையும் வெளிக் கொண்டுவர இவனது தலைமைத்துவம் கை கொடுக்கின்றது. கிளிநொச்சியைக் கைப்பற்றும் அத்தாக்குதல் அப்போது வெற்றியடையாமல் போனது. எனினும் பெரும்பாலான கரும்புலிகள் வெற்றிகரமாக தமது இலக்கை நிறைவுசெய்து தளம் திரும்பியிருந்தனர். கை என்பு முறிவுக்காயம் மாறுவதற்காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான். அக்காலப் பகுதியில் தன்னுடன் பணியாற்றி வீரச்சாவடைந்த கரும்புலிகள் பற்றி கவிதைகளையும், இசைப் பாடல்களையும் எழுதி வெளியிட்டிருந்தான். புலிகளின் குரல் வானொலியில் பல கவியரங்குகளில் இவன் குரல் ஒலித்திருந்தது. மீண்டும் பயிற்சிகள் எடுத்து அடுத்த தாக்குதலுக்கு தயாராகினான்.

மீண்டுமொரு முறை கிளிநொச்சி இராணுவத்தளம் தாக்கியழிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஆதரவாக இம்முறையும் ஆனையிறவினுள் ஊடுருவியிருந்த கரும்புலிகள் அணியில் பூட்டோ காணப்பட்டான். அப்பொழுது பூட்டோவிற்கு பாம்பு கடித்து விட்டது. நஞ்சு இரத்தத்தில் கலக்க மரணம் இவனை நோக்கி வந்தது. எனினும் பகை முகாமினுள் பற்றையொன்றினுள் வைத்து விசமுறிப்பு மருந்து (ASV) ஏற்றப்பட்டது. மீண்டுமொருமுறை சாவிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழீழம் ஒரு பெறுமதியான கரும்புலியை மீளப் பெற்றுக் கொண்டது. அத்திட்டம் வெற்றிபெற கிளிநொச்சி நகரம் விடுவிக்கப்பட, ..II வெற்றி உறுதிப்படுத்தப் படுகின்றது.

மீண்டும் கடின தொடர்பயிற்சிகளை மேற்கொள்கின்றான். அக்காலத்தில் அவசியம் தேவைப்பட்ட ஒரு வெற்றியைப் பெறுவதற்காக தலைவரின் ஆசி பெற்று நகரும் கரும்புலியணியில், இலக்கின் மீதான தாக்குதல் தொடுக்கும் பொறுப்பை ஏற்று இணைந்து கொள்கின்றான். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதிஉயர் பாதுகாப்புடன் பேணப்படும் மணவாளன்பட்டை எனும் இடத்தில் தரையிறங்கும் உலங்குவானூர்தியைத் தாக்கி அழிக்க வேண்டும். பல்வேறு சிரமங்களைத் தாண்டி குறித்த இடம்சென்று பகைவர்களுக்குள் ஓடிச்சென்று அவர்களுக்கு மத்தியில் நின்று அவர்களின் கண் முன்னால் தரையிறங்க முற்பட்ட உலங்கு வானூர்தியை வானில் வைத்தே லோஉந்துகணையால் தாக்கியழித்து பயத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்து நிற்கும் எதிரிகளின் மத்தியில் இவனும் ஏனைய வீரர்களும் தப்பிவந்த செயலானது கரும்புலித் தாக்குதல் வரலாற்றில் புதிய அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டது.

இடைக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வேவு எடுக்கப் பணிக்கப்பட்டான். அங்கு மக்களோடு மக்களாகவும் கரந்துறைந்திருக்கும் கெரில்லாவீரனாகவும் செயற்பட்டு பல பெறுமதியான வேவுத் தகவல்களைச் சேகரித்திருந்தான். களங்களினுள் செல்லும்போது முன்னும் களம் விட்டகலும் போது இறுதியாகவும் வெளிவருவது இவனது இயல்பான பண்பு. இவன் தலைமையில் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் வன்னித்தளம் திரும்புமாறு பணிக்கப்பட்டான். இவர்களுக்கென ஒரு சாதாரண மீன்பிடிப் படகு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் இவனும் அறிவுக்குமரனும் ஏற முற்படுகையில் சற்று நிதானித்தவன் அத்திட்டத்தைக் கைவிடுகின்றான். இவரும் ஒன்றாகப் போய் ஏதாவது நடந்தால் இவ்வளவு நாளும் கடினப்பட்டு சேகரித்த தகவல்கள் செல்லாக்காசு ஆகிவிடும். ஆதலால் அறிவுக்குமரனை முதலில் போகச்சொல்கின்றான். படகில் ஏறியவனிடம் இரண்டு கைக்குண்டுகளைக் கொடுத்து விடுகிறான். அந்த துர்ப்பாக்கிய நிகழ்வு நடந்தே விடுகின்றது. எதிரிப் படகுகள் அறிவுக்குமரனின் படகை வழிமறித்தன பகைவன் சோதனையிட முயற்சிக்கையில் அறிவுக்குமரன் குண்டுகளை வெடிக்கவைத்து தன்னையும் படகையும் அழித்துக் கொண்டான்.

பூட்டோ எடுத்த முடிவால் வேவுத்தகவல்கள் பத்திரமாக வன்னித்தளம் வந்து சேர்ந்தது. அவர்களின் கோட்பாட்டின்படி பூட்டோவின் தீர்மானமானது முற்றிலும் சரியானது எனினும் உணர்வு ரீதியாக பூட்டோவை இது பாதிக்கவே செய்தது. அறிவுக்குமரனுக்குப் பதிலாகத் தான் வந்திருக்கலாமோ என அடிக்கடி கூறிக்கொள்வான்.

'
கரும்புலிகளின்வளர்ச்சிப் போக்கில் இவனது பங்களிப்பின் காரணமாக கரும்புலிகள் சம்பந்தமான விதிமுறைகளை எழுதுவதிலும் அதனைப் பரீட்சிப்பதிலும் இயக்கம் இவனை ஈடுபடுத்தலானது. இவன் தனது நடைமுறைச் செயற்பாடுகளினூடாக கோட்பாடுகளை உருவாக்கினான். கரும்புலிகளுக்கான சத்தியப் பிரமாணம், பயிற்சிகள், ஒத்திகைகள், விதிமுறைகள் அடங்கிய மரபு சார் யாப்பை உருவாக்கப் பெரும் பங்களிப்பைச் செய்தான். இவனது தொடர் அனுபவமும் செயற்பாடும் காரணமாக கரும்புலிகளுக்கான இலக்கங்கள் ஒதுக்கப்படும்போது இவனுக்கு க.1 ஒதுக்கப்பட்டது. அன்று முதல் இவன் நம்பர் வண்எனும் சங்கேத பாசையில் அழைக்கப்படலானான்.

பல்வேறு தரத்திலான போராளிகளுடனும் வயது வேறுபாடுடைய பொதுமக்களுடனும் இவன் பழகும் முறை வித்தியாசமானது. அந்தந்த வயதுக்காரர்களுடன் அவர்களின் குணாம்சங்களுடன் பழகினான். தனது அதிக ஓய்வு நேரங்களை சிறு குழந்தைகளுடனேயே செலவழித்தான். அவர்களுக்குச் சித்திரம் வரையப் பழக்குவதிலிருந்து பரீட்சைகளில் சித்தியடைய என்ன செய்யவேண்டும் என்பது வரை நடைமுறைச் சாத்தியமான வகையில் சொல்லிக்கொடுப்பான். எந்த நேரமும் இந்த நாட்டிற்காக வெடிக்கக் கூடிய கரும்புலி ஒருவனே தங்களுடன் பழகுகின்றான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. எனினும் அதனை இவன் ஒருபோதும் ஒத்துணர்வைப் பெறுவதற்காகப் பயன்படுத்தியதே இல்லை.

ஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை தொடர் காவலரண்களைக் கடந்து உள்நுழைவது முடியாமல் போனது. உள் நிலைமைகளை அவதானித்து உட்புறமாகத் தாக்குதல் தொடுத்தால் மட்டுமே எதிரி குழப்பமடைவான். பலரால் இயலாமல் போகையில் மீண்டும் பூட்டோ தெரிவானான். கரும்புலிகளால் ஒரு முன்முயற்சி இயலாமல் போனது எனும் வார்த்தையை கேட்கவே அவன் விரும்பவில்லை. பொதிசெய்யப்பட்ட சிறு ஆயுதங்களுடனும், உணவுப் பொருட்களுடனும் கடலினுள் இறங்கினான். கரையோரமாக நீண்ட தூரம் நீந்திச் சென்றான். கடற்கரை பூராகவும் இராணுவமும், கடலில் கடற்படையும் அதியுசார் நிலையில் நின்றது. கடலினுள் பகைப் படகுகள் ரோந்து செய்தவண்ணம் இருந்தன. கரையேறுவதோ கடலில் ஆழம் செல்வதோ சாத்தியமற்றதானது. மீண்டும் தளம் திரும்புவதை அவன் கற்பனை கூடச் செய்யவில்லை.

செய் அல்லது செத்துமடி என்பதுவே இவனது தாரக மந்திரமானது. சாதகமான சூழலுக்காகக் கடலில் மிதந்தபடியே காத்திருக்கலானான். பாரங்களைக் குறைப்பதற்காக உணவுப் பொருட்களையும் ஆயுதங்களையும் கழற்றி விடலானான். தொலைத்தொடர்பு சாதனமும் ‘G.P.S ம் குப்பியும் மட்டுமே அவனிடம் மிஞ்சியிருந்தது. இரண்டு நாட்களாக கடல் நீரில் மிதக்கலானான். பசியும், தாகமும், கடல் நீரின் உப்புச் செறிவும் அவனைச் சித்திரவதை செய்தது. தண்ணீரில் மிதந்தபடி தண்ணீர் இன்றித் தாகத்தால் தவித்தான். அவனையும் மீறி வெளிவந்த கண்ணீரைத் தண்ணீராகச் சுவைத்தான். தாயையும் தலைவனையும் நினைத்து நினைத்து தாங்குதிறனை வளர்த்து, யுகங்களாகும் கணங்களைக் கழித்தான்.

பூட்டோ தடயமின்றி வீரச்சாவடைந்து விட்டானோ எனப் பெரும்பாலானோர் கருதத்தொடங்கினர். ஒருவாறு எதிரி முகாமிற்குள் புகுந்து கொண்டான். புற்களில் நனைந்திருந்த பனி நீரை நாக்கால் நக்கி நாக்கிற்கு தண்ணீர் காட்டிக் கொண்டான். உட்சென்றவன் தொடர்பெடுத்து தான் உயிருடன் இருப்பதை உறுதிப் படுத்தினான். அவன் கொடுத்த ஆள்கூற்றுத் தளங்கள் மீது எங்கள் ஆட்லறிகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. பத்திற்கு மேற்பட்ட ஆட்லறிகளும் பல பல்குழல் பீரங்கிகளும், ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான எறிகணைக் களஞ்சியங்களும் அழித்தொழிக்கப் பட்டன. உணவின்றி, ஆயுதமின்றி, பூஞ்சணம்பிடித்த பூசணிக்காயைத் துண்டுதுண்டாகச் சாப்பிட்டவாறு, உயிரையும் இயங்கு சக்தியையும் தக்க வைத்தவாறு பலநாள் பணி தொடர்ந்தான். தனியான இவன் பகைத்தளத்தினுள் கரும்புயலாகச் சுழன்றான். பெரும் படையணி புகுந்ததாக செயலாற்றி நாசம் ஏற்படுத்தினான்.

தொலைத் தொடர்பை இடை மறித்ததில் பூட்டோ தனியாகத்தான் செயற்படுகின்றான் என்பதை பகைவன் அறிந்து கொண்டான். இவனைப் பிடிப்பதற்கு பலநூறு இராணுவத்தினரையும் பல உந்துருளி அணிகளையும் களத்தில் இறக்கி களைத்துப் போனான் எதிரி. இறுதியாக இவனை மீட்டுவர இன்னொரு கரும்புலியணி உள்நுழைக்கப் பட்டது. அப்பிரதேசம் இவனுக்குத் தண்ணிபட்ட பாடாக இருந்ததால் அவர்களையும் அழைத்துக் கொண்டு இருபத்தியாறாம் நாள் இவன் வெளியில் வந்தான். மெலிந்து, நோய்வாய்ப்பட்டு சிறிதளவு திரவ ஊடகங்களைக் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு உதடுகளும் நாக்கும் வெடித்து, எலும்பும் தோலுமாக அவன் வெளிவந்த காட்சி காண்பவர் கண்களைக் கசிய வைத்து.

தொடர்ந்து நிமோனியாக் காய்ச்சலுக்கு உள்ளானான். சிலவாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டவன் மீண்டும் பணிக்கு ஆயத்தமாகினான். அக்காலப் பகுதியில் இவன் முள்ளியவளைப் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து இவனது தாய் மகனைச் சந்திப்பதற்காக மன்னாரில் இருந்து பேருந்தில் வந்திறங்கினார். அங்கு தென்பட்ட பெண் போராளிகளிடம் பூட்டோ தங்கியிருக்கும் மருத்துவமுகாம் எதுவென கேட்க, "யாரு கரும்புலி பூட்டோவா?" என அவர்கள் கேட்டு முகாமிற்கு வழிகாட்டி விட்டனர். தாயும் மகனும் சந்தித்த அந்தக் கணங்கள் அவர்களுக்கே உரித்தானவை.

பலவருடங்களாக மகன் கரும்புலி என்பது தாயிற்குத் தெரியும். தாய்க்குத் தெரியும் என்பது மகனிற்கும் தெரியும். ஆயினும் இருவரும் ஒருபோதும் அதுபற்றிக் கதைத்தது இல்லை. மகன் தான்பட்ட கடினங்களைக் கவிதைகளாக எழுதியிருந்தான். அவற்றை வாசித்த அன்னையின் கண்கள் நீர் சொரிந்ததை அருகிருந்தவர்கள் பார்த்தார்கள்.

அடுத்த பணிக்காக இவன் தயாராகிக் கொண்டிருக்கையில் தலைவரிடம் இருந்து தகவல் வருகின்றது, உலங்குவானூர்தி தாக்குதல் சம்பவத்தைப் படமாக எடுக்கும்படி பணித்திருப்பதாகவும் அதில் அவன் செய்த பாத்திரத்தை இவனையே நடிக்கும் படியும். விடுதலைப்புலிகள் சொல்லுக்கு முந்திச் செயலை வைத்திருப்பவர்கள். செய்தவற்றையும் சொல்லாமல் விடுபவர்கள். இக்குணாம்சத்தினால் வரலாறு திரிந்து விடக்கூடாது என்பதற்காக தாக்குதல் செய்தவனையே அப்பாத்திரமாக நடிக்கச் சொன்னார்கள். வன்னிமண் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த காலம். திரைப்படம் எடுப்பதற்கான போதிய வளங்கள் இல்லை. ஆயுத தளபாடங்களையும், துணைப்பாத்திரங்களுக்குத் தேவையான ஆளணிகளையும் இவனே ஒழுங்குபடுத்தி படப்பிடிப்பை விரைவாக்கினான். படப்பிடிப்பின் நிமித்தம் பல்வேறு தரப்பினர்களுடனும் பழகவேண்டி ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறைவேறும் நிலையில் மீண்டுமொரு சிறு தவறு ஏற்பட்டது. உள்ளூர் முகவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பூட்டோ விளக்கம் கோரலுக்கு உள்ளாக்கப்பட்டான். பலர் எதிர்பார்த்ததற்கு மாறாக தேச நன்மைக்காக உருவாக்கப்பட்ட பொறி முறைக்கு ஒத்துழைப்பதையும் தனது கடமைகளில் ஒன்றென வெளிப்படுத்தினான். இவன் நடித்த திரைப்படம் "புயல் புகுந்த பூக்கள்" என வரலாற்றுப் பதிவானது. இக்காலப் பகுதியில் வெளிச்சம் பவள இதழில் இவனது உள் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சம்பவத்தை புயலவன் எனும் பெயரில் எழுதியிருந்தான்.

தொடர்ந்து தேசத்திற்கான இவன் பணி தியாகத்தின் உச்சம் நோக்கி வேக மெடுத்தது. மறைமுகக் கரும்புலியாகச் செயற்படத் தொடங்கினான். அரசியல் தெளிவும், இலட்சியப் பற்றும், செயல்திறனும், நிதானமும் உள்ள போராளியாக இவன் ஒளிவீசினான். இவனது பன்முகத்திறமை மறைமுகக் கரும்புலிகளை பலமடங்காகப் பலம்பெறச் செய்தது. இவனதுசிலவருடச் செயற்பாடுகள் வெளித்தெரிய முடியாதவையாகின. ஆனால் தமிழினம் அதனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. சுதந்திர தமிழீழத்தின் பலமான அத்திவாரத்தினுள் இவனது உழைப்பு கலந்திருக்கின்றது. மாவிலாறைச் சாட்டாக வைத்து எதிரி யுத்தத்தைத் தொடங்கினான். முகமாலையைத் தாண்டி ஆனையிறவு நோக்கி எதிரி முன்னேறத் திட்டமிட்டிருக்கிறான். சம்பூர் மீது பெரும் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றான். இராணுவத்தை திசைதிருப்பவும், குழப்பவும் அவசரமாக நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பலமுறை தலைவனுக்கு தடைநீக்கியாகச் செயற்பட்ட பூட்டோ இம்முறையும் முதல் தெரிவானான். தலைவருடனும், தளபதிகளுடனும் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டான். ஓகஸ்ட் ஆரம்ப நாட்களில் ஒரு நாள் இரவு இரண்டு மணியளவில் தலைவரிடம் இறுதி விடை பெற்றுக்கொண்டான்.

மறைமுகக் கரும்புலி மீண்டும் தரைக் கரும்புலியாக யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசித்தான். பாரிய இராணுவத் திருப்புமுனைச் சாதனைகள் எதிர்பார்க்கப் பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களில் செய்திவந்தது. "நம்பர் வண்" தொடர்பு இல்லை என. இம்முறையும் தப்பிவருவான் என அவனைத் தெரிந்த அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் பூட்டோ வீரச்சாவு உறுதியான செய்தியுடன் 2006ஆம் ஆண்டு மாவீரர்தினம் கொண்டாடப்பட்டது.

ஒரு வேவுப்புலி நிபுணனை, வரைபடக் கலைஞனை, ஒரு கரும்புலிக் கவிஞனை, பாடலாசிரியனை, எழுத்தாளனை, நடிகனை, உச்சவினைத் திறனுடைய அப்பழுக்கற்ற செயல்வீரனை, போராளிகளுக்கான ஒரு உதாரண புருசனை, பட்டறிவால் உருவான போரியல் ஞானியை, எல்லாவற்றுக்கும் மேலாக தேசத்தையும், தலைவனையும் நேசித்த ஒரு "நம்பர் வண்" ஐ தமிழீழம் பௌதீக ரீதியாக இழந்து விட்டது. எனினும் தலைமுறைகள் கடந்து கடத்தப்படும் அவனது செயல் வீச்சுக்களின் விளைவாக சுதந்திர தமிழீழம் விடுதலை பெற்று, வளம்பெற்று தலைநிமிர்ந்து எங்கள் பெயர் சொல்லி வாழும்.

கரும்புலி லெப்.கேணல் பூட்டோ நடித்த 'புயல் புகுந்த பூக்கள்' என்ற முழுநீளத் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் 'பூட்டோ' என்ற பேரிலேயே வரும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மணவாளன் பட்ட முறிப்பில் கரும்புலியணியால் உலங்குவானூர்தி ஒன்று தாக்கியழிக்கப்பட்ட சம்பவத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அத்தாக்குதலில் பங்குபற்றிய ஐந்து கரும்புலி வீரர்களில் நால்வர் வெவ்வேறு சம்பவங்களில் வீரச்சாவடைய எஞ்சியிருந்த ஒரேயொரு வீரன் இந்த பூட்டோ மட்டுமே. தற்போது அவரும் வீரச்சாவடைந்து விட்டார்.

குறிப்பு :- இவனது செயற்பாடுகளில் சிலவற்றை மட்டும் இப்பகுதி ஏந்திவந்துள்ளது. காலம் கைகொடுக்கையில் இவன் வீரகாவியமாக விரிவான்.

ஓயாத அலைகள் - 3 பகுதி 2 

இது 1999 ஆம் ஆண்டின் புரட்டாசி மாதம். கரும்புலிகள் அணியின் மூன்றாம் தொகுதியும் அதற்குரிய நிர்வாகமும் வேறோர் இடத்திலிருந்து கடற்பயிற்சிக்காக முல்லைத்தீவின் கள்ளப்பாடு என்ற கடற்கரைக் கிராமத்துக்கு நகர்ந்திருந்தது. இங்கே கரும்புலிகள் அணி எனப்படுவது தரைக் கரும்புலிகள் அணியைக் குறிக்கும். பொதுவாக கடற்கரும்புலிகளைகடற்கரும்புலிகள்என்றும், தாயகப்பகுதிக்கு வெளியேயோ உள்ளேயோ இயக்கத்தால் உரிமை கோரப்படாத தற்கொடைத் தாக்குதல் நடத்தும் அணியைமறைமுகக் கரும்புலிகள்என்றும், மற்றவர்களைகரும்புலிகள்என்றும் அழைப்பதுண்டு. இந்தத் தரைக்கரும்புலிகள் அணி இம்ரான்-பாண்டியன் படையணியின் நிர்வாகத்தின் கீழ் ஓரணியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது.

கரும்புலி அணியில் இணைய விரும்பும் போராளிகள் தேசியத் தலைவருக்குத் தமது விருப்பைத் தெரிவித்துக் கடிதம் எழுதுவார்கள். பலர் விடாமல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பார்கள். அக்கடிதத்துக்கான பதில் தலைவரிடமிருந்து அனுப்பப்படும். அதில் பெரும்பாலும்உரிய நேரம் வரும்போது நீங்கள் கரும்புலி அணியில் இணைத்துக்கொள்ளப்படுவீர்கள்என்று குறிப்பிடப்பட்டிருக்கும். சிலருக்கு அவர் கரும்புலியாக இணைத்துக் கொள்ளப்பட மாட்டார் என்ற பதிலும் அதற்குரிய விளக்கத்தோடு அனுப்பி வைக்கப்படுவதுண்டு. ஏற்கனவே சகோதரர் யாராவது கரும்புலியாக இருந்தால், கரும்புலியாகச் செயற்படுவதற்குரிய உடற்றகமை இல்லாதிருந்தால் போன்ற காரணங்களுக்கான அந்த வாய்ப்பு மறுக்கப்படும். கரும்புலியாக விருப்புக் கடிதமெழுதி அச்சந்தர்ப்பம் கிடைக்காமலேயே நூற்றுக்கணக்கான போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

கரும்புலி அணியொன்று உருவாக்கப்படும்போது எற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தவர்களுள் குறிப்பிட்டளவானோர் மட்டும் தெரிவு செய்யப்படுவார்கள். வரிசையில் காத்திருக்கும் நூற்றுக்கணக்கானோரில் நாற்பது அல்லது ஐம்பது பேர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர்கள் இப்போதும் கரும்புலி அணியில் இணையும் அவாவோடு உள்ளனரா என்பதை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். வெவ்வேறு படையணிகள், துறைகள், பிரிவுகளிலிருந்து கரும்புலிகளாகத் தெரிவு செய்யப்படுபவர்கள் முதலில் தேர்வுப்பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சிறப்புப் பயிற்சியெடுப்பதற்கான அடிப்படைத் தகமைகளுக்கான தேர்வில் தேறுபவர்கள் அதன்பின்னர் கரும்புலிகளுக்கான சிறப்புப் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்வுப் பயிற்சியில் தேறாதவர்கள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள். கரும்புலிகளுக்கான சிறப்புப் பயிற்சிநெறியை நிறைவுசெய்த பின்னரே நடவடிக்கைக்கு அனுப்பப்படுவார்கள். கரும்புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் களத்தில் வீழும்வரை பயிற்சியோடுதான் நாட்கள் கழியும். நடவடிக்கை... பயிற்சி.... மீண்டும் நடவடிக்கை... மீண்டும் பயிற்சி என்று இந்தச் சுழற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்.


மீண்டும் கள்ளப்பாட்டுக் கடற்கரைக்கு வருவோம். இப்போது கரும்புலிகள் அணியின் மூன்றாவது தொகுதி சிறப்புப் பயிற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. சிறப்புப்பயிற்சியின் இறுதிக்கட்டமாக கடற்பயிற்சிக்காக கள்ளப்பாட்டுக்கு வந்திருந்தது அவ்வணி. கரும்புலிகள் அணிக்குரிய கடற்பயிற்சிக்கான பொறுப்பை பின்னாளில் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கோகுலன் (கடற்சிறுத்தைகள் அணியில் இருந்தவர்) ஏற்று வழங்கிக் கொண்டிருந்தார். அவரோடு சின்னக்கண்ணன், புவனா என்று கடற்புலிப் போராளிகள் இருவரும் இணைந்து கடற்பயிற்சி வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

ஆண், பெண் இருபாலாரும் சேர்ந்து 30 வரையானவர்கள் இக்கடற் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதிக்கும் மூன்றாவது தொகுதிக்கும் பயிற்சி ஆசிரியராகக் கடமையாற்றிய அருளன் இந்தத் தொகுதிக்கான கடற்பயிற்சி முடிந்ததும் அவரின் நீண்டகால விருப்புக்கிணங்க கரும்புலியாக இணைத்துக் கொள்ளப்படுவாரென்றும் அவர் இரண்டாம் தொகுதியோடு இணைந்து செயற்படலாமென்றும் தலைவரால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. இந்தக் கடற்பயிற்சியை விரைவாகவும் சரியாகவும் முடித்துவிட வேண்டுமென்ற அவாவோடு அருளன் செயற்பட்டுக்கொண்டிருந்தார்.

அருளனைப் பற்றி சிறிதாவது சொல்லியாக வேண்டும். இம்ரான்-பாண்டியன் படையணியின் கெனடி-1 தொடக்கப்பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படைப் பயிற்சியை முடித்தபின் தொடர்ந்தும் இம்ரான்-பாண்டியன் படையணியில் செயற்பட்டவர். மேஜர் மாதவன் (2000 ஆம் ஆண்டு ஓயாத அலைகள் -3 இன் யாழ்ப்பாணம் மீதான புலிகளின் படையெடுப்புக் காலத்தில் தனங்கிளப்பில் வீரச்சாவடைந்தவர். சிறந்த பாடகன், கவிஞன், எழுத்தாளன் என்று பன்முகத் திறமைவாய்ந்த போராளி) கரும்புலிகள் அணிக்கான பொறுப்பாளனாயும் பயிற்சியாளனாயும் இருந்த காலத்தில் அருளனும் கரும்புலிகள் அணிக்கான பயிற்சியாளருள் ஒருவராய் இணைந்து கொண்டார்.

இந்தக் காலப்பகுதியில் கரும்புலிகளின் பயிற்சிப் பாசறை சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுக்கு இலக்காகியது. அதில் அருளன் மிகக்கடுமையான காயத்துக்குள்ளானார். வயிற்றுப்பகுதியில் மிகநீளமான காயம். மிகக்கடுமையான நிலையிலிருந்து ஒருவாறு காயம் மாறி மீண்டும் பயிற்சியாசிரியனாக தனது பணியைத் தொடர்ந்தார். ஆனாலும் அந்தக் காயத்தின் தாக்கத்திலிருந்து இறுதிவரை அவரால் மீளமுடியவில்லை. தனது வேதனை, இயலாமை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு மற்றவர்களுக்குகுறிப்பாக பொறுப்பாளர்களுக்கும் பயிற்சியெடுக்கும் போராளிகளுக்கும் - அவை தெரியாமல் மறைத்தபடி தனது கடமையைத் தொடர்ந்தார். அவரது எண்ணம் முழுவதும் இந்த மூன்றாம் தொகுதிக்கான பயிற்சியை சிறப்பாக முடித்துவிட்டு கரும்புலியாக இணைந்து செயற்பட வேண்டுமென்பதிலேயே இருந்தது.

இந்தக் கடற்பயிற்சியிலும் அருளனால் முழுமையாக ஈடுபட முடியவில்லை. அதுவும் நீச்சல் என்பது வயிற்றுத் தசைகளுக்கு அதிக வேலை கொடுக்கும் ஒரு பயிற்சி. ஐந்து, ஆறு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மிதக்கவோ நீந்தவோ வேண்டிய பயிற்சியும் இதில் உள்ளடக்கியிருந்தது. அருளனால் எவ்விதத்திலும் அதற்கு ஈடுகொடுக்க முடியாது. ஆனாலும் தனது எல்லையையும் தாண்டி அருளன் அப்பயிற்சியில் ஈடுபட்டார். ஒருவித வெறியோடுதான் அந்தக் கடற்பயிற்சியில் அருளன் ஈடுபட்டிருந்தார். அனால் அருளனை அதிகம் சோதிக்க வேண்டிய தேவையில்லாமல் உடனடியாகவே அருளனுக்கான பணி வந்து சேர்ந்தது. ‘சிங்க புரஆட்லறித்தளம் மீதான தாக்குதல் முழுவதற்கும் தலைமைதாங்கிச் செல்லும் பொறுப்பு அருளனுக்கு வழங்கப்பட்டு அவர் கடற்பயிற்சியிலிருந்து நிறுத்தப்பட்டு கரைச்சிக்குடியிருப்பில் தங்கியிருந்த மற்றக் கரும்புலி அணியோடு இணைக்கப்பட்டார்.

நீச்சற் பயிற்சிக்கு வருவோம். கரும்புலிகள் அணியின் மூன்றாம் தொகுதியில் இருந்தவர்களுள் சிலர் ஏற்கனவே மிக நன்றாக நீந்தக் கூடியவர்கள்; சிலருக்கு அறவே நீச்சல் தெரியாது. மகளிர் அணியில் சசி, சுதாஜினி போன்றவர்கள் (கரும்புலி மேஜர் சசி நெடுங்கேணியிலும், கரும்புலி மேஜர் சுதாஜனி பளை ஆட்லறித் தகர்ப்பிலும் வீரச்சாவடைந்தனர்) மிகநன்றாக நீந்துவார்கள். அவர்கள் இருவரும் மாலதி படையணியின் சிறப்பு அதிரடிப்படை அணியொன்று உருவாக்கப்பட்டபோது அதில் பயிற்சியெடுத்திருந்தவர்கள். சசி நீந்துவதைப் பார்க்க வியப்பாக இருக்கும். தாங்கள் ஊரிலேயே பெரிய நீச்சற்காரர்கள் என்று கதைவிட்டுக் கொண்டிருந்தவர்கள் பலர் வாய்பொத்தியிருக்க வேண்டிய நிலை வந்தது சசியால்தான். குறுந்தூர வேக நீச்சலென்றாலும் சரிதான், ஐந்து கடல்மைல் தூரநீச்சல் என்றாலும் சரிதான், ஆண்களின் முன்னணிக் குழுவோடு நீந்தக் கூடியராக சசி இருந்தார்.


காலை, மாலை என்று ஒருநாளில் இருதடவைகள் கடற்பயிற்சி நடைபெறும். நீச்சலில் அடிப்படையே தெரியாதவர்களை கோகுலன் மாஸ்டர் பொறுப்பெடுத்துப் பழக்கினார். மிக அழகாக நீச்சற்கலையைச் சொல்லித் தருவார். இயக்கத்தில் நீச்சற் பயிற்சிக்குரிய ஆசிரியர்கள் என்றுவந்தால் போராளிகளுக்கு முதலில் நினைவுக்கு வருவது இவராகத்தான் இருக்கும். 2002 இல் யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தகையோடு பிரிகேடியர் பால்றாஜ் தலைமையில் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியொன்று நாயாற்றில் தொடங்கப்பட்டது. நூற்றுக்குமதிகமான போராளிகள் பங்குகொண்ட அந்தப் பயிற்சிப் பாசறையில் கடற்பயிற்சியும் இணைக்கப்பட்டிருந்தது. அங்கும் அப்பயிற்சியைப் பொறுப்பெடுத்துத் திறம்பட முடித்தவர் இதே கோகுலன் மாஸ்டர்தான்.

கரும்புலிகள் அணிக்கான கடற்பயிற்சி அதிகாலை மூன்றுமணிக்கெல்லாம் தொடங்கிவிடும். கரைக்கு வர ஐந்து, ஆறு மணித்தியாலங்கள் கூட ஆகலாம். பிறகு மீளவும் மாலையில் பயிற்சி தொடங்கும். இடைப்பட்ட நேரம் பெரும்பாலும் நித்திரையோடுதான் போகும். கடற்பயிற்சிக் களைப்பும், கடற்காத்தும் சேர்ந்து சொர்க்கத்துக்குக் கொண்டு போகும்.

கடற்பயிற்சிக் காலத்தில் அங்கு நடந்த சுவாரசியங்களுள் ஒன்று உணவு வழங்கல். சிலாவத்தையிலிருக்கும் ஒரு தோட்டத்தில்தான் நிர்வாகம் இயங்கிவந்தது. அங்கிருந்துதான் கரைச்சிக் குடியிருப்பிலிருக்கும் அணிக்கும், கள்ளப்பாட்டிலிருக்கும் அணிக்கும் உணவு வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஓர் ஒற்றை மாட்டுவண்டிலில் உணவு வந்து போகும். கடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அணிக்கான உணவு வழங்கலில்தான் சிக்கல் வந்து சேர்ந்தது.

மகளிர் பக்கத்தில் சிக்கல் இருக்கவில்லை. ஆனால் ஆண் போராளிகள் பக்கத்தில் அவித்துக் கொட்டக் கொட்ட அது காணாமற் போய்க்கொண்டேயிருந்தது. கடற்பயிற்சி முடித்துக் கரைதொடும்போது புகையத் தொடங்கும் வயிறு எளிதில் அடங்கிவிடாது. போராளிகளுக்குத் தீனிபோட்டு நிர்வாகத்தால் கட்டுப்படியாகவில்லை. அப்போது ஒரு போராளிக்கான ஒருநேர உணவுக்காக வழங்கற் பகுதியால் ஒதுக்கப்பட்டிருந்த மாவின் நிறை 250 கிராம். ஆனால் இப்போது 500 கிராம் மா கூடப் போதுமானதாக இருக்கவில்லை. அவ்வளவுக்குப் போராளிகள் விழுங்கித் தள்ளினார்கள். தமக்கான மேலதிக உணவுத் தேவைபற்றி வழங்கற்பிரிவிடம் பேசியபோது, அவர்கள் நம்பாமல் தாம் நேரில் வந்து சோதிக்க வேண்டுமென்று சொல்லி ஒருநாட்காலை நேரிலே வந்து போராளிகள் உண்பதைப் பார்த்துப் போனார்கள்.

குமரன், அதுசரி, இன்னும் எவ்வளவு காலம் உந்தக் கடற்பயிற்சி இருக்கு?’

எல்லாரும் அஞ்சு கடல்மைல் முடிக்க வேணும். பிறகு வெயிற்றோட நீந்தப் பழக்க வேணும். பலன்சில நிண்டு சுடப்பழக்க வேணும், சுழியோடப் பழக்கோணும்.... எப்படியும் ஒரு மாசமாகுமெண்டு நினைக்கிறன்

என்ன பகிடியே விடுறியள்? உவங்களுக்கு ஒருமாசம் சாப்பாடு போட நாங்கள் ஏதேன் கப்பலெல்லோ கடத்த வேணும்?’ – பகிடியாகவே சொல்லிவிட்டுப் போனார் வழங்கற்பகுதியிலிருந்து வந்த பொறுப்பாளர்.

கள்ளப்பாடு மிகமிகச் சிறிய கிராமம். மிகமிக அன்பான மக்கள். நாங்கள் இருந்த இடத்தில் பொதுமக்களின் வாடி ஒன்றிருந்தது. மாலையில் கரைசேரும் படகிலிருந்து எமக்கு ஒரு திருக்கை மீன் அன்றாடம் தந்துகொண்டிருந்தார்கள் அம்மக்கள். றீகஜீவன் (கரும்புலி மேஜர் றீகஜீவன் ஓயாத அலைகள் – 3 இல் யாழ்ப்பாணத்தில் ஒரு நடவடிக்கையின் போது வீரச்சாவு) செய்யும் திருக்கைப் புட்டுக்காக நாங்கள் காத்திருப்போம். பசி அடங்காவிட்டால் தென்னம்பாளையோடு கடற்கரைக்குக் கிளம்பிவிடுவான் றீகஜீவன், அவனோடு நாங்களும். கரையிலோடும் நண்டுகளை அடித்து சுட்டுச் சாப்பிடுவோம். என்னதான் இரகசியமாக, நடுச்சாமத்தில் இதைச் செய்தாலும் மறுநாட்காலை மகளிர் அணி தொடக்கம் கிராமம் முழுவதும் கேட்கும்என்ன.. ராத்திரி பீ-நண்டு சுட்டுச் சாப்பிட்டனியள் போலகிடக்கு?...’ ஒருகட்டத்தில், நடுச்சாமத்தில் நண்டுசுடும் மணத்திலிருந்து தப்ப நினைத்தோ என்னவோ இரண்டு திருக்கைகளைத் தரத் தொடங்கினார்கள் அம்மக்கள்.

இடையில் ஒருநாள் கடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்களை வேலைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலைக் கட்டடத்தை அண்டிய பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். வடலியோலைகள், உடைந்த ஓடுகள், தகரங்கள், பனங்குற்றிகளைக் கொண்டு ஓர் இராணுவ முகாமின் மாதிரி அமைக்கும் வேலை அது. அந்நடவடிக்கைக்கான அணியினரில் சிலர் வேவு நடவடிக்கையிலும் ஏனையோர் பயிற்சிக்கான அயத்தப்பணியிலும் நின்ற காரணத்தால் மற்ற அணியைக் கொண்டே மாதிரி அமைக்கப்பட்டது. கரைச்சிக் குடியிருப்பும் கள்ளப்பாடும் ஒரு கிலோமீற்றர் இடைவெளியில் இருந்தும்கூட இரு அணிகளுக்குமிடையில் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. ஒருவரையொருவர் சந்திக்கவோ கதைக்கவோ சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. மாதிரி இராணுவத் தளத்தை வைத்துக்கொண்டு ஏதோவோர் ஆட்லறித் தளம் மீதான தாக்குதலுக்கான பயிற்சி நடக்கப் போகிறதென்ற அளவில் கடற்பயிற்சி அணி ஊகித்திருந்தது.

தொடரும்...

இடுகையிட்டது Vanni Online

ஓயாத அலைகள் - 3 பகுதி 1 

இத்தொடரின் முதற்றொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும்.

எதிர்பாராத விதமாய் மழை தூறத் தொடங்கியது. தூக்கக் கூடியவற்றைத் தூக்கிக்கொண்டு ஏனையவற்றை பொலித்தீன் பைகளால் மூடிவிட்டு அருகிலிருந்த தட்டியொன்றின் கீழ் எல்லோரும் ஓடி ஒதுங்கினோம். மழை பலப்பதற்கான அறிகுறிகள் இல்லை. வானம் நன்கு வெளித்திருந்தது.

சே! பயிற்சியை முடிச்சிட்டு வேளைக்குப் போய்ப் படுப்பமெண்டா கோதாரிவிழுந்த மழை குழப்புது’ – நித்தி சலித்தான்.
மாஸ்டர்! மழை பெலக்காது. தூறலுக்கயே செய்து முடிப்பம். அதுவும் பயிற்சிதானே. சண்ட நேரத்தில மழை தூறினா ஓடிப்போய் தாழ்வாரத்துக்க ஒதுங்கிறதே?’ – மலர்விழி சொன்னாள்.

இதுக்கயும் உனக்கு நக்கல். எனக்குப் பிரச்சினையில்லை, தூறலுக்க நிண்டு நாளைக்கு நீங்களொராள் தும்மினாலே கடாபியண்ணை என்னைக் கும்மிப் போடுவார்’. – இது சசிக்குமார் மாஸ்டர்.

இறுதியில் மழைத்தொப்பிப் போட்டபடி பயிற்சியைத் தொடர்வதென முடிவாகியது. அணிகள் தமது நகர்வுக்கான தொடக்கப் புள்ளிகளுக்குப் போய் நகரத் தொடங்குகின்றன. வெட்டைக்குள்ளால், பற்றைகளுள்ளால், வடலிக் கூட்டங்களுள்ளால் என்று வெவ்வேறு தரைத் தோற்றங்களுள்ளால் அந்த நள்ளிரவில் அணிகள் இலக்குநோக்கி நகர, இராணுவத்தினராக நியமிக்கப்பட்டவர்கள் நகர்வுகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவொரு மாதிரிப் பயிற்சி. ஆட்லறித்தளம் ஒன்றைத் தாக்கயழிப்பதற்காக கரும்புலிகள் அணி பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறது. லெப்.கேணல் சசிக்குமார் மாஸ்டர் (இவர் இம்ரான் – பாண்டியன் படையணியைச் சேர்ந்த சசிக்குமார்; 2009 இல் வன்னியில் நிகழ்ந்த கடும் போர்க்காலத்தில் வீரச்சாவடைந்தார். வேவுப்பிரிவு, வரைபடப் பிரிவு போன்றவற்றுக்கு வெவ்வேறு காலப்பகுதிகளில் பொறுப்பாயிருந்த மற்ற சசிக்குமார் மாஸ்டரோடு இவரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.) தலைமையில் இந்தப் பயிற்சித் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அப்போது போரினால் சிதைந்துபோய் பயன்படுத்தாமலிருந்த முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக் கட்டடத்தை மையமாக வைத்து இந்த இராணுவ முகாமின் மாதிரிவடிவம் அமைக்கப்பட்டுப் பயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தச் சுற்றாடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு மக்கள் குடியிருப்புக்கள் இல்லை. இரவு, பகல் என்று மாறிமாறி இறுதிக்கட்டப் பயிற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதில் கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதியைச் சேர்ந்தவர்கள் முழுமையாகவும் மூன்றாம் தொகுதியைச் சேர்ந்தவர்களில் நாலைந்து பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளார்கள். தாக்குதல் நடத்தும் அணிகள் இன்னும் முழுமையாக இல்லை. ஏனென்றால் இப்போதும் வேவுக்காக சிலர் உள்ளே சென்றுள்ளார்கள்.

முன்னர் வேவுப்போராளிகள் தகவல்கள் திரட்ட, கரும்புலிகள் தனியே நடவடிக்கை மட்டும் செய்யும் நிலை மாறி, கரும்புலிகளே வேவுப்பணியையும் செய்து நடவடிக்கையையும் செய்யும் நிலை நடைமுறைக்கு வந்திருந்தது. இதில் கரும்புலிகள் தனித்தோ வேவு அணியினருடன் இணைந்தோ இந்த வேவுப்பணியைச் செய்துகொண்டிருந்தார்கள். வேவு நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளும் உள்ளனர்.

இப்போது நடந்து கொண்டிருக்கும் மாதிரித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களும் மாறிமாறி குறிப்பிட்ட இலக்குக்கு வேவுக்காகாகச் சென்று வந்துகொண்டிருந்தனர். இந்த வேவு நடவடிக்கைக்கு லெப். கேணல் இளம்புலி (முன்னர் மணலாற்று மாவட்டப் படையணியில் இருந்தவர். மிகச்சிறந்த வேவுக்காரன். தனியொருவராக இவர் சாதித்தவை ஈழப்போராட்டத்தில் பொறிக்கப்பட வேண்டியவை. பின்னர் மணலாற்றில் வீரச்சாவடைந்தார்.) பொறுப்பாக இருந்தார். ஒவ்வொரு முறையும் வேவுக்காகச் செல்பவர்களைக் கூட்டிச் சென்றுவருவார். சென்றுவரும் அனைவரும் மிகத் திருப்தியாகவே இருந்தார்கள். தாக்குதல் எந்தவிதச் சிக்கலுமின்றி நூறுவீதமும் வெற்றியாக அமையுமென்பதில் யாருக்கும் சந்தேகமிருக்கவில்லை. ஆட்லறித் தளத்துள் வெற்றிகரமாகப் புகுந்தது மட்டுமன்றி ஆட்லறிகளை மிக நெருக்கமாகவும் சென்று பார்த்து வந்திருந்தார்கள். குறைந்தது மூன்று முறையாவது அடுத்தடுத்து தொடர்ச்சியாக இப்படிப் போய்வந்தது மிக அதிகளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.


தாக்குதல் இலக்கானது மணலாற்றுக்காட்டுள் அமைந்திருக்கும்சிங்கபுரஎன்ற இராணுவ முகாம். எமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மிக நீண்ட தூரத்தில் இருந்தது அந்த முகாம். மேலும் அப்பகுதிகளில்ஏன் அதையண்டிய பகுதிகளிற்கூட எமது ஊடுருவற் செயற்பாடுகளோ தாக்குதல்களோ நடந்ததில்லை. எனவே எதிரி மிகமிக அலட்சியமாக இருந்தான். அந்த முகாமின் அரைவட்டப்பகுதி பெண் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது. சிறிலங்கா இராணுவத்தைப் பொறுத்தவரை போர்ப்பகுதிகளிலோ, ஆபத்து ஏற்படுமெனக் கருதும் பகுதிகளிலோ பெண் இராணுவத்தினரைப் பயன்படுத்துவதில்லை. அங்கே நிலைப்படுத்தப்பட்டிருக்கும் ஆட்லறிகளைக் கூட எதிரி பயன்படுத்துவதில்லை. அவை பயன்படுத்தக்கூடிய தூரவீச்சுக்குள்ளும் இருக்கவில்லை. மணலாற்றின் முக்கிய இராணுவத் தளங்களான மண்கிண்டிமலை, கொக்குத்தொடுவாய் போன்ற தளங்கள் தாக்கப்படும்போது அவற்றுக்கான பாதுகாப்புச் சூடுகளை வழங்குவதற்காகவே இந்த ஆட்லறித்தளத்தை இராணுவம் அமைத்திருந்தது.

பாதுகாப்பு விடயத்தில் எதிரி மிக அலட்சியமாக இருந்த, ஆனால் கரும்புலிகள் தமது தாக்குதல் வெற்றியில் நூறு வீதமும் உறுதியாகவிருந்த இந்த முகாம் மீதான தாக்குதல் திட்டம், ஏனோ தெரியவில்லை சிலதடவைகள் இடைநிறுத்தப்பட்டது. பயிற்சிகள் இறுதிக்கட்டத்தையடைந்து எல்லாம் தயாராகும் நேரம் தலைவரிடமிருந்து இடைநிறுத்தச் சொல்லி அறிவித்தல் பிறப்பிக்கப்படும். சிலநாட்களில் மீண்டும் கட்டளை கிடைக்க, ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா எனப்பார்ப்பதற்காக வேவு அணியை அனுப்பிவிட்டு இங்கே பயிற்சி தொடங்கிவிடும். பிறகு மீளவும் திட்டம் பிற்போடப்படும். இப்படி இரண்டு மூன்று தடவை நடந்தது. இவற்றுக்கான காரணம் பின்னர் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

இந்த வேவுகள், மாதிரிப் பயிற்சிகள் எல்லாம் நடந்துகொண்டிருந்த காலம் 1999 ஆம் ஆண்டு புரட்டாசி, ஐப்பசி மாதங்களில். அன்றைய நேரத்தில் வன்னியிலிருந்த இராணுவச் சமநிலைபற்றிச் சொல்லியாக வேண்டும். ஜெயசிக்குறு நடவடிக்கையானது கண்டிவீதியில் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றிய நிலையில் நின்றுகொண்டிருந்தது. மேற்கிலே ரணகோச தொடரிலக்கத்தில் நடந்து பள்ளமடுவில் நின்றுகொண்டிருந்தது. வன்னியின் கிழக்கிலே ஒட்டுசுட்டான் சந்தியையும் தாண்டி எதிரி முன்னேறி நின்றிருந்தான்.

நாயாற்றுக் கடற்கரையிலிருந்து வளைந்து வளைந்து செல்லும் இராணுவத்தின் முன்னணிக் காப்பரண் வரிசை, நெடுங்கேணிஒட்டுசுட்டான் வீதியைப் பாதுகாத்து, ஒட்டுசுட்டான்மாங்குளம் வீதியைப் பாதுகாத்து நீண்டுசென்று மேற்குக் கடற்கரை வரை நூற்றுக்கும் அதிகமான கிலோமீற்றர்கள் நீண்டிருந்தது. அதே காப்பரண் வரிசையை மறித்துப் புலிகளும் தமது காப்பரண் வரிசையை அமைத்துச் சண்டையிட்டு வந்தார்கள்.

இந்தக் காலப்பகுதியில் நெடுங்கேணி தொடக்கம் நாயாற்றுக் கடற்கரை வரையான பகுதிகளில் இருதரப்புக்குமிடையே சண்டைகள் நடப்பதில்லை. இப்பகுதிகளில் படையினரின் செறிவும் குறைவாகவே இருந்தது. அப்போது மிகப்பெரிய ஆளணிக் குறைபாட்டை சிறிலங்காப் படைத்தரப்புக் கொண்டிருந்தது. முன்னணிக் காப்பரண்களை விட பின்னணி முகாம்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலேயே அதிக கவனத்தை சிறிலங்காப் படைகள் செலுத்தியிருந்தன. இந்தப் பகுதிகளூடாக புலிகளின் வேவு அணிகள் மிகச் சுலபமாகப் போய்வந்துகொண்டிருந்தன. ‘சிங்கபுரத்துக்கான வேவும் இவ்வழியேதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

சிங்கபுர மீதான தாக்குதல் நடந்தால் மணலாற்றின் முன்னணிக் காப்பரண் வரிசையில் மாற்றங்கள் நடக்கும். இராணுவக் கட்டுப்பாட்டுக் காடுகளுக்குள் புதிதாக தற்காலிக சிறுமுகாம்கள் அமைக்கப்படலாம்; புதிய சுற்றுக்காவல் அணிகள் வருவிக்கப்பட்டு காடுகளில் கண்காணிப்புக்கள் அதிகரிக்கலாம். புதிய சூழலைப் படித்து முடிக்க இயக்கத்துக்கு இன்னும் சிலகாலம் தேவைப்படலாம். சிங்கபுர மீதான தாக்குதல் மட்டுமே இப்போதைக்குப் போதுமென்றால் இவற்றைப் புறக்கணித்து அந்தத் தாக்குதலைச் செய்யலாம். சமீபகாலமாக யுத்தகளம் மந்தமடைந்திருந்தது. இராணுவச் சமநிலையில் தமிழர் தரப்பின் கையை ஒருபடி உயர்த்த சிங்கபுர மீதான தாக்குதல் பெரிதும் தேவைப்பட்டது. இத்திட்டத்தோடு தொடர்புடைய போராளிகள் நூறுவீதமும் வெற்றி உறுதியான இந்த நடவடிக்கையைப் பெரிதும் எதிர்பார்த்தார்கள். இது பிற்போடப்பட்டுக் கொண்டிருந்த காரணத்தை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

ஆனால் தலைவருக்கோ இத்திட்டம் மட்டுமே மூளையில் இருக்கவில்லை. மணலாற்றுக்காட்டில் எதிரியின் அந்த இலகுத்தன்மை அவருக்குத் தேவையாக இருந்தது. அதில் கல்லெறிந்து குழப்ப அவர் விரும்பவில்லை. ஆனாலும் சிங்கபுர மீதான தாக்குதல் திட்டத்தையும் முழுமையாகக் கைவிடவில்லை.

தொடரும்...
இடுகையிட்டது Vanni Online
 


சிவதீபனுக்கோர் சபதம் கேள் – வித்யாசாகர்

 
வன்னித் தீவின் தளபதியே
நெஞ்சுக் கூடெரித்து நஞ்சுண்ட தீபமே
ஆணையிரவில் ஆணையிட்டு -
புலிக்கொடி நாட்டிய பகிரதா – கேட்கிறதா???
எல்லி நகைத்தவரிடம்
சொல்லி அடித்த வீரமே
இருபத்தைந்து ஆண்டில்
புலிகளின் வளர்ச்சியோடு வளர்ந்த போர்புயலே – கேட்கிறதா???

சிங்களனாயிரம் சங்கருத்து
முல்லைத் தீவுபிடித்து
புலித்தலைவனின் படைக்கு மீண்டுமிரண்டு
பீரங்கி பரிசளித்த சிவதீபமே – கேட்கிறதா???

ஈழ கனவு சுமந்து
போராட்ட நெருப்பு குழைத்து
வீரமறவர் குருதிகளந்த மண் அணை கட்டி
கிளிநொச்சியை காத்த மாவீரா – கேட்கிறதா???

அர்ப்பணிப்பு, வீரம், உறுதிக்கு வலு கூட்ட
வடப்போர் முனையில் நின்று
பரிசளிப்பு விழா நடத்தி – வீரர்களின் நெஞ்சுக்கு
பேச்சுரம் பாய்ச்சிய கட்டளை தளபதியே – கேட்கிறதா???

அறுபதாண்டு காலம் ஈழம் சுமந்த
விடுதலையென்னும் ஒற்றை வார்த்தையை
இருபத்தைந்தாண்டு காலம் நீ சுமந்து
திருப்பித் தருகையில் உயிரையும் தந்த தீபனே;

இதயம் முழுதும் ரத்தமின்றி
பெற்ற உற்ற உறவுகளின்றி
ஒற்றை மரமாகவேனும் நிற்போம்,

நினைவில் எமை மறந்தும் ஒழிப்போம் -
உனை மறவோம் கேள்;

ஈழமுள்ளவரை நீயிருப்பாய்
உன் நினைவற்று போகும் முன்
ஈழம் படைப்போம்!

வெள்ளையப் படைக்கு சிக்குண்டு மாய்ந்த
இந்திய மரணங்களை மறந்து
ஈழத்தில் – அடிமை சங்கிலி பூட்ட புகுந்த
அமைதிப் படையென்ன -

ஆயிரம் படை வரட்டும்;
எப்படை வரினும் எம் படை வெல்லும் தினம்
உனக்கே உனக்கே உரித்த-தெம் சபதம் கேள்!!!

------------------------------------------------------------------------------------

யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.

தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.

தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.

1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் “தாங்கோ பாப்பா” ஆகும்.

இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.

1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.

1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.

இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.

பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.

1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.

தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.

தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.

இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.

1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.

1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.

1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.

யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.

தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.

ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.

இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.

1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.

1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.

ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.

இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.

குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.

2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.

அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான ‘L’ வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.

கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக் குண்டுத் தாக்குதலில் வீரகாவியமானார்.

25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.

சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.”

தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும்.

pathivu.com

தமிழீழம் நமது வீரர்களின் கனவு – கண்மணி 

தமிழீழம் நமது வீரர்களின் கனவு – கண்மணி அறம் சார்ந்த வீரம், அதுதான் தமிழ் தேசிய ராணுவத்தின் கட்டமைப்பு. இந்த உலகத்தில் எந்த ராணுவ வீரர்களுக்கும் இல்லாத ஒழுக்கம், தமிழ் தேசிய ராணுவத்திற்கு மட்டும்தான் உண்டு. இதற்காக தமிழர்கள் ஒவ்வொருவரும் கர்வப்பட்டுக் கொள்ளலாம். தமிழ் தேசிய ராணுவத்தை எமது தேசிய தலைவர் அறம் வழி நின்று கட்டியமைத்தார்.

அறத்தோடுத்தான் மறவர்களை உருவாக்கினார். எந்த நிலையிலும் ஒழுக்க நிலைக்கு எதிராக எமது வீரர்கள் நின்றது கிடையாது. எப்போதும் தமது வாழ்க்கையில் தனிமனித ஒழுக்கத்தை அவர்கள் தகர்த்தெறிந்ததில்லை. எண்ணம், செயல் அனைத்தும் முழுக்க முழுக்க தமது மக்களின் மீட்புக்காக மட்டும் செயல்பட்டது. தமது மண்ணின் விடுதலையே அவர்களின் உயிர் மூச்சாய் இருந்தது. காயங்களை துச்சமென மதித்து, களத்திலே காற்றாய் சுழன்று வீசினார்கள். புரவிகளின் கால்களைவிட, எமது புலிகளின் கால்கள் அதிவேகத்தில் பறந்தது.

உலக அரங்கிலே எமது தமிழ் தேசிய ராணுவத்தைப் போன்று வீரத்திலும், விவேகத்திலும் ஒன்று சேர நின்றவர்கள் ஒருவரும் கிடையாது. எந்த ஒரு ராணுவமானாலும், எந்த நாட்டின் மீது போர் தொடுத்தாலும் அந்த நாட்டில் பெண்கள் பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது இயல்பான நிகழ்வாக கருதப்பட்டது. அணு அளவு, அணுவின் துகள் அளவுகூட எமது வீரர்கள், எமது தேசிய தலைவரின் எண்ணங்களுக்கு எதிராக நடந்தது கிடையாது. சிங்கள மக்களே அவர்களின் மன சிம்மாசனங்களில் எமது வீரர்களை அமர வைத்து அழகு பார்க்கும் அளவிற்கு அவர்களின் அறவாழ்வு செழித்தோங்கி நின்றது. யாரோடும் சமரசம் இல்லாத ஒழுக்கத்திற்கு சொந்தக்காரர்கள் எமது தமிழ்தேசிய ராணுவ வீரர்கள்.

இதை எமது தேசிய தலைவர், தமது வாழ்க்கையின் மூலம், தமது நடவடிக்கையின் மூலம், தமது சொல்லின் மூலம், தமது செயலின் மூலம் நிகழ்த்திக் காட்டினார். அவரின் குனிதலும், நிமிர்தலும்கூட ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே இருந்த காரணத்தினால் விடுதலைப்புலிகள் என்கின்ற எமது தமிழ்தேசிய ராணுவம், ஒழுக்கத்திற்கு மாறாக எப்போதுமே நடந்தது கிடையாது என்பதற்கு சான்றுகள் தமிழீழ மண்ணிலே மட்டுமல்ல, சிங்கள தீவிலும் இரைந்து கிடக்கிறது.

இவர்களைப்போல் கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் கொண்ட வீரர்களை யாம் கண்டதில்லை என சிங்கள இளைஞர்கள் சிரித்த முகத்தோடு எமது தமிழ் தேசிய ராணுவத்தை வர்ணனை செய்கிறார்கள். போர் குணம் மிக்கவர்களாய் இருந்தாலும்கூட, போராளிகளாய் இருந்தாலும்கூட, அச்சமற்று களமாடும் ஆற்றல் கொண்டவர்களாய் இருந்தாலும்கூட, அநீதிக்கு துணைப்போக எமது தமிழ் தேசிய ராணுவம் எப்போதும் முயன்றது கிடையாது. அது வீரத்திற்கு வித்திட்ட, உலகத்திற்கு தமிழ் தேசியத்திற்கு அடையாளம் தந்த எமது தேசிய தலைவரின் கொடை. இப்படி களமாடிய மாவீரர்களின் வரிசையிலே பால்ராஜ், தீபன் போன்ற வீரப்புலிகளின் உன்னதங்களை போற்றிப்புகழ வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் போர்குணம் நிறைந்த மண்ணிலே பூத்தவன்தான் மாவீரன் தீபன்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் அறிவியல் மாணவனாக சிறந்துயர்ந்த தீபன், தமது இனமக்களின் விடுதலை என்பது இதைவிடச் சிறந்ததென கருதி, வரலாற்றின் பக்கங்களில் வாசித்தறியப்படும் பெயராக தமது பெயரை பதிவு செய்வதின் அவசியத்தை உணர்ந்ததால், இயக்கத்தில் இணைந்தார். தீபனை இயக்கத்திற்கு அறிமுகப்படுத்திய மாவீரன் மேஜர் கேடில்ஸ் 14.2.1987 அன்று கைத்தடியிலே இடம்பெற்ற வெடிவிபத்தில் கள பலியானார். அவர் கண்டெடுத்த அருமை முத்துதான் தீபன் எனும் இயக்கப் போராளி. பகிரத குமார் 1984ல் தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டதின் மூலம் தீபன் என பெயர்மாறிப் போனார். 1987ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 29ஆம் நாள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை மீறல்களால் ஏற்பட்ட பல்வேறு போர், பெரும் எழுச்சி வடிவமாகி, இந்திய ராணுவத்திற்கெதிரான போராக உருமாறியபோது, இந்திய அமைதிப்படை என்ற தமிழின அழிப்பு படைக்கு எதிரான சமரில் தீபன் கிளிநொச்சியில் ராணுவ பொருப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் ராணுவ பொருப்பாளராகவும் எமது தேசிய தலைவரால் நியமிக்கப்பட்டார்கள். இந்திய அமைதிப்படை அமைதிக்குப் பதிலாக ஆக்கிரமிப்புப்போரை அதிகரித்த போது, தமிழீழத்தில் முல்லைத்தீவும், கிளிநொச்சியும்தான் பெரும் எதிர்ப்பை சந்தித்தன.

1988ஆம் ஆண்டில் வன்னிப்பகுதியின் ராணுவ பொருப்பாளராக ஆற்றல் வாய்ந்த, அசைக்க முடியாத, மண்ணின் மீது மதிப்பும், அன்பும் கொண்ட மாபெரும் போராளி பால்ராஜூக்கு துணையாக தீபன் நியமிக்கப்பட்டபோது, இவர்கள் வழி நடத்திய சமர்களின் ஆற்றல், வரலாற்றுப் பதிவுகளாய் மாறும் என இவர்களே நம்பி இருக்க மாட்டார்கள். பல்வேறு சிறப்பு வாய்ந்த வெற்றிகளை இந்த இணையர்கள் இயக்கத்தின் முடிகளில் சூட்டி மகிழ்ந்தார்கள். அதற்கான இழப்புகளை குறித்து அவர்கள் எந்த நிலையிலும் தம்மை குறைத்துக் கொண்டது கிடையாது. அவர்களின் எண்ணங்களெல்லாம் எமது தேசம் ஒன்றுதான். எமது தேசிய தலைவரின் கட்டளையே அவர்களின் இதயங்களில் ஒலிக்கும் இனிய வார்த்தை. எமது தேசிய தலைவரின் சொற்களே அவர்களை வழி நடத்தும் ஒளி விளக்கு.

இந்திய அமைதிப்படை 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழீழத்தை விட்டு தோற்று வெளியேறியபோது, ஜூன் மாதத்தில் மீண்டுமாய் சிங்கள-பௌத்த பேரினவாதிகளுக்கும், தமிழ் தேசியத்திற்கும் இடையேயான சமர் தொடங்கியது. மாங்குளம், கொக்காவில் முகாம் தகர்ப்பு ஆகியவை, பிரிகேடியர் பால்ராஜ் சமர்களத்தில் கண்ட வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளாகும். 1991ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆணையிரவு முகாம் மீதான எதிர்தாக்குதல் சமர், உலகில் உள்ள எந்த ராணுவமும் நிகழ்த்தாத மாபெரும் சிறப்புமிக்க, பெருமைமிக்க வீரத்தை, விவேகத்தை, ஆற்றலை, கண்ணியத்தை, துல்லியமான பகுப்பாய்வு திட்டத்தை வகுத்தளித்த தேசிய தலைவரின் எண்ணங்கள், ஆணையிரவு வெற்றியாக தமிழீழ வரலாற்றில் இடம்பிடித்தது. 1992ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சார்ல்ஸ் அந்தோணி சிறப்புப்படையின் தளபதியாக மாவீரன் பால்ராஜ் நியமிக்கப்படுகிறார். அதே காலக்கட்டத்தில் தீபன், வன்னிப்பகுதிக்கு தளபதியாகிறார்.

இந்த இருவரின் இணைப்பு, இதயபூமி என்றழைக்கப்பட்ட மண்கின்டி மலைமீதான சமர், வரலாற்றில் இதுவரை எவராலும் அழிக்கமுடியாத பெரும் வெற்றியை தேடித் தந்தது. அதோடு தீபனின் வீரத்தை விளக்கிச்சொல்ல யாழ்தேவி மற்றும் தவளைப்பாய்ச்சல் சமர்கள் எதிராளிக்கூட வியந்து பாராட்டும் விளைச்சலை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பெற்றுத் தந்தது. 93 செப்டம்பரில் நடைபெற்ற இச்சமரில் பால்ராஜூக்கு ஏற்பட்ட காயத்தால், படை களத்திலிருந்து வெளியேறிய பால்ராஜின் வெற்றிடத்தை தீபன் நிரப்பி, சிங்கள பேரினவாத ராணுவத்தை விரட்டியடித்து, மாபெரும் முறியடிப்பு சமரை நிகழ்த்திக் காட்டினார். ராணுவ வரலாற்றில் மண் குவியலுக்கு இடையே நின்று சமர் புரியும் புதிய யுக்தியை நிகழ்த்தி, சிங்கள ராணுவத்தை விரட்டி அடித்து, அவர்களின் உளவியலை உடைத்துப் போட்டதோடு, ராணுவ கட்டுப்கோப்பை சிதறடித்தப் பெருமை தீபனுக்கே உண்டு. இதன் மூலம் இயக்கத்திற்கு புதிய புதிய ராணுவ கருவிகளை சிங்கள ராணுவம் வாரி வழங்கிவிட்டு ஓடி ஒளிந்துவிட்டது.

பூநகரி முகாமை தீபனும், தீபன் தலைமையிலான தமிழ் தேசிய ராணுவமும், பானு தலைமையிலான தமிழ் தேசிய ராணுவமும் இணைந்து நடத்திய பெரும் சமர், அவர்களை விரட்டி அடித்ததோடு, அப்போதும் அவர்கள் வாரி வழங்கிய கருவிகளும், குறிப்பாக விசைப்படகுகளும் இயக்கத்திற்கு கடற்புலிகள் உருவாக காரணமாக அமைந்தது. 1993ல் நடைபெற்ற இச்சமர், இதுவரை சமன் செய்யப்படாத அளவிற்கு பெரும் பெருமைக்குரியதாக இன்றுவரை கருதப்பட்டுக் கொண்டிருக்கிறது. 1994ஆம் ஆண்டு இலங்கையின் அன்றைய அதிபர் சதிலீலாவதி சந்திரிகா பொறுப்பில் இருந்தபோது, நடைபெற்ற பேச்சுவார்த்தை முறிந்து போனதால், 95ல் மீண்டுமாய் ஒருசமர் நடைபெற்ற போது, தமது ஆற்றல் வாய்ந்த பங்களிப்பை அழுத்தமாய் பதிவு செய்த, அளப்பரியா ஆற்றல் வாய்ந்தவன் தீபன் எனும் போராளி.

யாழ்ப்பானம் இயக்கத்தின் கரங்களிலிருந்து நழுவியப்போது, வன்னியை தமது தளமாக அமைக்க, தலைமை முடிவெடுத்தது. அந்த காலக்கட்டத்தில் தலைமைக்கு பெரும் இடையூறாக இருந்தது, முல்லைத்தீவு ராணுவ முகாம். அதை அகற்றுவதின் மூலமே வன்னிப்பகுதியில் தலைமையகம் சிறப்பாக செயல்படும் என்பதை அறிந்த எமது தலைமை, தீபனை அழைத்து, முல்லைத்தீவு ராணுவ முகாமை அகற்றுவதற்கான திட்டத்தை அளிக்கச் சொன்னபோது, மிகச் சிறப்பான ஒரு திட்டத்தை தீபன் வகுத்தளித்து, எமது தேசிய தலைவரின் பெரும் பாராட்டுதலை பெற்றார். அந்த திட்டத்தின்படி தாக்குதல் நடக்கவும் தேசிய தலைவர் கட்டளையிட்டபோது, தீபனின் திறமை மிக சிறப்பாக வெளிப்பட்டது. ஜூலை 18, 1996 தமிழீழ விடுதலை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்த ஒரு பெரும் தாக்குதல் அது.

முல்லைத்தீவு முகாம் தகர்க்கப்பட்டு, சிங்கள ராணுவத்தினர் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு, பெரும் கருவிக் குவியலை எமது இயக்கத்தின் கரங்களிலே ஒப்புவித்து, ஓடி ஒளிந்தது சிங்கள ராணுவம். இந்த படையெடுப்புதான் எமது தேசிய ராணுவத்தை கரந்தடி தாக்குதலிலிருந்து தடம்மாற்றி, மரபுவழி சமருக்கு இட்டுச் சென்றது என்று குறிப்பிடலாம். அதேபோன்றே 1997ல் சிங்கள ராணுவம் ஜெயசிக்குரூ என்கின்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, புளியங்குளத்தை காக்கும் பொறுப்பு புலிப்படையின் நம்பிக்கை நாயகன் தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும், நெடுங்கேனியையும் எளிதாக கைப்பற்றிய சிங்கள ராணுவம், புளியங்குளத்தை கைப்பற்றமுடியாமல் திணறியது. சிங்கள ராணுவத்தை திணறடித்த ஆற்றல் வாய்ந்த களவீரராக களமாடினார் தீபன்.

இன்றைய தினம் துரோகத்தின் வடிவமாய் திகழும் கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன், பலநேரங்களில் ஜெயசிக்குரூ ராணுவ நடவடிக்கை காலங்களில், தாம் வன்னிப்பகுதியின் கட்டளை தளபதியாக நின்று களமாடியதாக கதைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் கருணாவின் களப்பணிக்கு கரம் இணைத்த ஆற்றல் வாய்ந்த அறவீரன் தீபன் என்பதை கருணா, திட்டமிட்டு மறைத்து வருகிறார். அதேபோன்றே 1998ல் சத்ஜெய எனும் ராணுவ நடவடிக்கையை சதிராடிய புலிப்படைக்கு தலைமை தாங்கியவர் தீபன் என்பதை நாம், மறுமுறை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். கிளிநொச்சியை ஓயாத அலைகள் 2ன் மூலம் கைப்பற்றியபோது, தீபனின் பங்களிப்பு அதில் மிகுந்து காணப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது.

18 மாதங்கள் போராடி மீட்ட ஆணையிரவை வெறும் மூன்று வாரங்களில் கைப்பற்றி, தமிழ் வீரத்தை, விடுதலைப்புலிகளின் போர் நுணுக்கத்தை, உலகறிய செய்ய காரணமான தீபனை நாம் இப்போது நினைத்துப் பார்க்கிறோம். இப்படி உலகே வியக்கும் வண்ணம் களப்பணியாற்றிய தீபன், பிரிகேடியர் பால்ராஜோடு இணைந்து ஆற்றிய அளவிட முடியாத தாக்குதலும், ஆணையிரவு களத்தில் தாம் காற்றைவிட மிக வேகமாக களமாடிய வீரமும் இன்றுவரை வியப்புக்குரியதாக நம்மை உற்றுப்பார்க்க வைக்கிறது. 24 ஏப்ரல் 2000 ஆணையிரவை மீண்டும் கைப்பற்றி விடலாம் என்ற கனவோடு சிங்கள பேரினவாத அரசு அக்கினிக்கீலா என்ற நடவடிக்கையை மேற்கொண்டபோது, அந்த நடவடிக்கையை சிதறடித்து, இலங்கை ராணுவத்தின் 55 மற்றும் 53 படை அணியை விரட்டி அடித்த பெரும் சமரின் கட்டளை தளபதியாக தீபன் களத்தில் இருந்தார் என்பதே நம்மை மேலும் உறுதியானர்வர்களாக மாற்ற வைக்கிறது.

இப்படி பல்வேறு களங்களை நாம் கண்டு கொண்டே இருக்கலாம். தீபன் அளவிட முடியாத வீரத்தின் விளைநிலம். தாயக மண்ணை நெஞ்சார நேசித்த மாவீரன். சமர் களங்களின் நாயகன் பால்ராஜூக்கு தோளோடு தோள் நின்ற உறவு. பால்ராஜ் என்னும் ஆற்றல் வாய்ந்த பாசறையில் வார்த்தெடுக்கப்பட்ட தீபன்அம்மான், நம்முடைய மனங்களிலிருந்து நீங்காத பேராற்றல் பெற்றவன். இன்று ஆற்றல் வாய்ந்த இந்த வீரமறவர்கள் நம்மிடையே இல்லை. காற்றாகி தமிழீழத்திலே அவர்கள் தவழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாயக மண் அடிமை விலங்கை உடைத்து, புதிய பரிமாணம் அடைந்து புத்தொளி வீசுவதை காண, அந்த வீரப்புலிகள் விழிகளைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எதற்காக களமாடினார்களோ, அவர்களின் வாழ்வு எந்த திசையை நோக்கி பயணித்ததோ, அந்த திசையை நோக்கி நாம் வணங்குகிறோம். அவர்களுக்கு வீர வணக்கம் செய்கிறோம்.

அவர்களின் எண்ணங்களை ஈடேறச் செய்ய வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. அவர்களின் வீரத்தை குறித்து புகழ் பேசிக் கொண்டிருப்பது மட்டுமே நமது கடமை அல்ல. அவர்கள் எதை செய்ய முனைந்தார்களோ அதை அடைய நாம் ஆற்ற வேண்டிய பெரும்பணி தான் நம் முன்னே குவிந்து கிடக்கிறது. இதுதான் நமது காலத்தின் கடமை. இந்த வரலாற்றுப் பணியை நாம் உடனடியாக செய்ய வேண்டிய கட்டாயம் நமக்குள் புதைந்திருக்கிறது. நாம் புத்தெழுச்சி மிக்க தமிழீழத்தைப் படைத்து, அதை அவர்களின் வீர வாழ்வுக்கு அர்ப்பணிக்கும்போதுதான், அந்த வீர மறவர்களின் எண்ணங்களும், ஏக்கங்களும் நிறைவு காணும். அதை செய்ய வேண்டிய நாளுக்காக நாம் காத்திருக்க வேண்டாம். இன்றே, இப்போதே செய்வோம். ஈகப் போராளிகள் பால்ராஜ், தீபன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வீரவணக்கம். தமிழீழம் நமது வீரர்களின் கனவு.

pathivu.com

லெப். கேணல் பொன்னம்மான் (மறுக்கமுடியாத‌ மாவீரம்)

யோகரத்தினம் குகன்
யாழ்ப்பாணம்
23-12-1956 to 14-02-1987

தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா....

என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது.

எமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும்.

ஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாக, தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

எமது இயக்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான்.


எழுபதுகளின் நடுப்பகுதியில் எமது தலைவருடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப்பயிற்சிகள் இந்தியாவில் ஆரம்பமாகின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் இருந்தனர். பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.

வெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார். பேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் சாத்தியமற்றதாக இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார். இந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி இராணுவத் தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும் முக்கிய காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார்.

பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை. யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்த கிட்டண்ணாவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். இராணுவ முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பிரதேசம். வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய அபாயம் இருந்தது. இராணுவ முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர்.

அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் சிரமத்துக்குரியதும் எமது வீரர்கள் தரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உடபுகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது. தினமும் அந்த இராணுவ முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு பவுசர் செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி: சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின. பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கஸ்டமான விடயமாக இருந்தது.

அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள். புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம்.

ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே அனுமதிப்பார்கள். இத்தனை சிரமங்களின் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள். பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன். மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, இராணுவ முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள்.

அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். அவர் பொன்னம்மானின் உறவினருங்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து விமானமொன்றைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர்.

14-2-87 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு உசிதமாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் இராணுவ ஹெலிகொப்டர்களும், குண்டு வீச்சு விமானங்களும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.

முதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டண்ணாவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய லொறிகள் தயார்ப்படுத்தப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் லொறிகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். லொறியின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவன் உட்புகும் போது ரொக்கட்டால் வாயில் காவல அரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது.

நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டண்ணா தாக்குதலை நடத்துவதற்காக, சகலருடனும் வாக்கிடோக்கியில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார்.

கிட்டண்ணா ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டண்ணா ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்... மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டண்ணா பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார்: பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் லொறி நின்றது. லொறிக்குள் பார்த்தபோது ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை.

பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள். பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்து விட்டார்.

முகாம்கங்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் சந்தோசத்தைக் குடிகொள்ள வைத்திருக்கும் அந்த மனிதன் இன்று இல்லை. "அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ" என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன. ஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள்.

தேசியத் தலைவரின் நினைவுகளில் லெப். கேணல் பொன்னம்மான்
 
 
 

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படை விமானங்களின் புகைப்படத் தொகுப்பு

உலக வரலாற்றில் விடுதலை இயக்கம் ஒன்று வான்படையையும் அதற்கான விமானங்களையும் கொண்டிருந்தது என்றால், அது தமிழீழ விடுதலை புலிகள் புலிகள் மட்டுமே ஆகும். விடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 (Zlin Z-143) ரக விமானங்கள் வன்னி வான்பரப்பில் முதல் முதல் பறப்பில் ஈடுபட்டபோது பிடிக்கப்பட்ட புகைப்படத்தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன.

அவை பின்னர் தாக்குதலுக்காக புலிகளால் மாற்றி வடிவமைக்கப்பட்டது. யுத்த விமானத்துக்கு ஏற்ற அடிப்படை வசதிகள் எதுவுமின்றி தயாரிக்கப்பட்ட இவ்விமானங்களைக் கொண்டு, விடுதலைப் புலிகள் சுமார் 7 முறை பறப்பில் ஈடுபட்டு வெற்றிகரமாக தாக்குதல் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

பறப்பில் ஈடுபட்டிருக்கும் விமானங்களை தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டுஅம்மான், பிரிகேடியர் தமிழ்ச்செல்வன், கேணல் ஜெயம், கேணல் விதுஷா, காஸ்ரோ, கேணல் தீபன் ஆகியோர் பார்வையிடுவதையும், பொட்டுஅம்மான், தமிழ்ச்செல்வன் இருவரும் விமானத்தில் மகிழ்ச்சியோடு பயணிப்பதையும் காணலாம்.

வான்படை வீரர்களுடன் தலைவர் பிரபாகரன்
 

கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி 

கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி
துரைசிங்கம் புஸ்பகலா
மண்கும்பான், யாழ்ப்பாணம்
10.6.1973 -16.8.1994

கடலன்னையின் பெண் குழந்தை (முதற் பெண் கடற்கரும்புலி)

உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.

அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.

"இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்"

அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும்.

தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம், தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.

தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.

காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை.

ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை.

கடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள்.

ஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது.

லெப்.கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க 'தவளை நடவடிக்கை' யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம்.

'நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா' என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது.

'பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை'

என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது.

கரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவ வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள்.

எல்லாம் தயார்.

கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. "உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்" தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.

அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள்.

இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்.

என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள்.

1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

எல்லோருக்குமே பரபரப்பு.

தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது.

ஆர் பெத்த பிள்ளையோ? எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ? என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர்.

'ரைட், கட்டளைக் கப்பல் அவுட்' என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர்.

சீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும்உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள்? என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ? ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய்? என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி 'எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே' என்ற எண்ணமே மேலோங்கியது.

அங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள்.

ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள்.

தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது.

இந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள்.

To Donate

Subscribe To Our Site